எல்லாமே ப்ளான்! கிரெடிட் கார்டு மூலம் ரூ. 4 கோடி மோசடி! வாடிக்கையாளர்களை ஏமாற்றிய வங்கி ஊழியர்!
மும்பையில் கிரெடிட் கார்டு கேஷ்பேக் மூலம் வங்கி மற்றும் வாடிக்கையாளர்களிடம் ரூ.4 கோடி மோசடி செய்ததாக 41 வயதான முன்னாள் வங்கி ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் வங்கி கொள்ளை, வாடிக்கையாளர்களிடம் மோசடி போன்றவை அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் நேற்று மும்பையில் கிரெடிட் கார்டு கேஷ்பேக் மூலம் வங்கி மற்றும் வாடிக்கையாளர்களிடம் ரூ.4 கோடி மோசடி செய்ததாக 41 வயதான முன்னாள் வங்கி ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் கடந்த மே மாதம் வங்கி கொடுத்த புகாரில், குற்றம் சாட்டப்பட்டவர் 83 கிரெடிட் கார்டுகளில் சம்பாதித்த கேஷ்பேக்கை பெற்று, அதை வங்கியில் இருந்து 4 கோடி ரூபாயை ஏமாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து வழக்குபதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், 41 வயதான நிதின் கரே தான் இந்த குற்றத்தை செய்தார் என்று கண்டறிந்தனர். வங்கியின் முன்னாள் ஊழியரான காரே வங்கி வாடிக்கையாளர்களின் ஷாப்பிங் மற்றும் கேஷ்பேக் ஆகியவற்றின் அறிக்கையை கையாள்பவராக இருந்துள்ளார். அங்கிருந்த தகவல்களை சேகரித்து கொண்டு, ஜனவரி 2021 முதல் ஆகஸ்ட் 2021 வரை அந்த நபர் ரூ.4 கோடி மோசடி செய்யப்பட்டதையும் போலீசார் கண்டறிந்தனர்.
அந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் செய்யாமல் இருந்த போதிலும், தங்கள் கிரெடிட் கார்டு கணக்குகளில் இருந்து தொடர்ந்து பணம் எடுக்கப்பட்டு வருவதை கண்டு ஒரு சில வாடிக்கையாளர்கள் வங்கியில் புகார் செய்துள்ளனர். அதன் அடிப்படையில்தான் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.
நாசிக்கைச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்டவரின் நண்பர் ஒருவருக்கு வெவ்வேறு நபர்களின் கிரெடிட் கார்டுகளை வழங்கியும், மேலும் பல கேஷ்பேக் பலன்களை நண்பரின் கிரெடிட் கார்டு கணக்குகளுக்கு அனுப்பி கைது செய்யப்பட்ட கரே இந்த் மோசடி செயலில் ஈடுப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக நிதின் கரே மீது பிரிவுகள் 420 (ஏமாற்றுதல்) மற்றும் 419 (ஆளுமை மூலம் மோசடி செய்ததற்கான தண்டனை) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் நாசிக்கைச் சேர்ந்த நபரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மும்பையில் நடந்த மற்றொரு மோசடி வழக்கு :
கடந்த மே மாதம் ரூ. 1.5 கோடி கிரிப்டோ மோசடிக்காக 23 வயதான பட்டதாரி ஒருவர் கைது செய்யப்பட்டார். இவர் மக்களின் பணத்தை கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து, அதில் கிடைக்கும் சிறிய தொகையை கொடுத்துள்ளார். அதனை நம்பி அவரது முதலீட்டாளர்களின் மேலும் முதலீடு செய்ய, அதனை பெற்றுகொண்டு ஏமாற்றியுள்ளார். முதலீட்டில் பெற்ற பணத்தை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, பலர் தாமாக முன்வந்து காவல்நிலையத்தில் புகார் அளிக்க, அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.