வாய்க்காலில் மிதந்த கொத்தனார் உடல்...கொலையா..? விபத்தா..? என போலீசார் விசாரணை..
மயிலாடுதுறை அருகே கட்டிடத் தொழில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வாய்க்காலில் உயிரிழந்த கிடந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே குளிச்சார் கிராம பாசன வாய்க்காலில் இளைஞர் ஒருவர் முகத்தில் ரத்தக் காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது கொலையா அல்லது விபத்தா என்ற கோணத்தில் செம்பனார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையைத் மேற்கொண்டுள்ளனர்.
30 வயதான இளைஞரின் உயிரிழப்பு
மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் தாலுகாவிற்கு உட்பட்ட குளிச்சார், சேரன்தோப்புத் தெருவைச் சேர்ந்த அன்பழகன் என்பவரது மகன் 30 வயதான ராமச்சந்திரன். இவர் கட்டிட வேலை செய்யும் கொத்தனாராகப் பணியாற்றி வந்தார். ராமச்சந்திரனுக்கும், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த செல்வப்பிரியா என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமச்சந்திரனின் மனைவி செல்வப்பிரியா, ராஜபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். வீட்டில் ராமச்சந்திரன் மட்டும் தனியாக இருந்து வந்துள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்
இந்நிலையில் குளிச்சார் பகுதி மக்கள் பாசன வாய்க்கால் கரை வழியாகச் சென்றபோது, வாய்க்கால் தண்ணீரில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் செம்பனார்கோவில் போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செம்பனார்கோவில் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார், பொதுமக்களின் உதவியுடன் சடலத்தை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். அப்போது உயிரிழந்தவர் சேரன்தோப்புத் தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பது தெரியவந்தது.
முகத்தில் ரத்தக் காயங்கள் - சந்தேகத்தில் போலீசார்
மீட்கப்பட்ட ராமச்சந்திரனின் சடலத்தைப் பரிசோதித்தபோது, அவரது முகத்தில் ரத்தக் காயங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. அவர் வாய்க்காலில் தவறி விழுந்து அடிபட்டாரா அல்லது மர்ம நபர்கள் யாரேனும் அவரைத் தாக்கி வாய்க்காலில் வீசிச் சென்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
போலீசார் ராமச்சந்திரனின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் சோகம்
மனைவி ஊருக்குச் சென்றிருந்த நேரத்தில், வாலிபர் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்து கிடந்தது அவரது குடும்பத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த உறவினர்களின் கதறல் அங்கிருந்தவர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.
போலீஸ் நடவடிக்கை
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ள செம்பனார்கோவில் போலீசார் "மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிகிறது. ராமச்சந்திரனுக்கு யாருடனாவது முன்விரோதம் இருந்ததா? அல்லது குடும்பப் தகராறு ஏதேனும் காரணமா? என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம்," என தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக ராமச்சந்திரனின் செல்போன் அழைப்புகள் மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். அமைதியான குளிச்சார் கிராமப்புறப் பகுதியில் நடந்த இந்த இளைஞரின் உயிரிழப்பு அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.






















