மயிலாடுதுறையில் பயங்கரம்: மதுபோதையில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன் - சடலத்தின் அருகிலேயே மயங்கிக் கிடந்த அதிர்ச்சி..
மயிலாடுதுறையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன் சடலத்தின் அருகிலேயே போதையில் கிடந்த அதிர்ச்சிச் சம்பவம் குறித்து போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கூறைநாடு பகுதியில், பட்டப்பகலில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு, சடலத்தின் அருகிலேயே கணவன் போதையில் சரிந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜவுளிக்கடை தொழிலாளி கைது
மயிலாடுதுறை மாவட்டம், ஆத்துகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியம் (வயது 40). இவரது கணவர் அழகப்பன். இவர் தஞ்சாவூர் மாவட்டம் கஞ்சனூர் அருகேயுள்ள துகிலி கிராமத்தைச் சேர்ந்தவர். இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். அழகப்பன் மயிலாடுதுறையில் உள்ள ஒரு பிரபல ஜவுளிக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் மதியம், மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைக்கு அழகப்பன் சென்றுள்ளார். அவருடன் மனைவி பாக்கியமும் வந்திருந்ததாகக் கூறப்படுகிறது. மது அருந்திய நிலையில் இருந்த அழகப்பனுக்கும், பாக்கியத்திற்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆத்திரத்தில் விபரீதம்
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அழகப்பன், அங்கிருந்த கட்டை அல்லது கல்லை கொண்டு பாக்கியத்தை சரமாரியாக தாக்கியதாகத் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த பாக்கியம், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், தனது மனைவி இறந்து கிடப்பது கூடத் தெரியாத அளவிற்கு மது போதையில் இருந்த அழகப்பன், சடலத்திற்கு அருகிலேயே நிலைகுலைந்து 'மயங்கி' விழுந்து கிடந்துள்ளார்.
போலீசார் நடவடிக்கை
அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள், பெண் ஒருவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதையும், அருகில் ஒருவர் மயங்கிக் கிடப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்து மயிலாடுதுறை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த பாக்கியத்தின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மயங்கிக் கிடந்த அழகப்பனை மீட்ட போலீசார், 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
விசாரணையில் சிக்கல்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அழகப்பனிடம் போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்த முயன்றனர். ஆனால், அவர் தீவிர மது போதையில் இருந்ததால், போலீசாரின் கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாத நிலையில் இருந்தார். விசாரணையின் போது தனது பெயரை மட்டும் கூறிய அழகப்பன், அதன் பிறகு சுயநினைவின்றி உளறத் தொடங்கினார்.
இது குறித்து போலீசார் தரப்பில் தெரிவிப்பதாவது
"முதற்கட்ட விசாரணையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருப்பது உறுதியாகியுள்ளது. எனினும், அழகப்பன் முழுமையான போதையில் இருப்பதால், கொலைக்கான சரியான காரணம் என்ன? என்பது குறித்து தற்போது வாக்குமூலம் பெற முடியவில்லை. அவருக்கு போதை தெளிந்த பிறகு விரிவான விசாரணை நடத்தப்படும். அப்போதுதான் குடும்பத் தகராறா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தெரியவரும் என்றனர்.
பரபரப்பான சூழல்
பட்டப்பகலில், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் மதுபோதையில் மனைவியை அடித்துக் கொன்ற சம்பவம் மயிலாடுதுறையில் காட்டுத்தீ போலப் பரவியது. இதனால் அரசு மருத்துவமனை வளாகத்திலும், கூறைநாடு பகுதியிலும் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.
மது அரக்கனால் ஒரு குடும்பமே சிதைந்துள்ளதோடு, ஒரு சிறுவனின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது. மதுபோதை மனிதனை எந்த அளவிற்கு மிருகமாக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
























