"நீங்க நம்பலனாலும் இதுதாங்க நிஜம் "மதுபிரியர்களால் பூட்டப்பட்ட டாஸ்மாக் - ஏன் தெரியுமா...?
சீர்காழி அருகே மதுப்ரியர்களே டாஸ்மாக் மதுபான கடையை பூட்டிய சம்பவம் நடந்தேறியுள்ளது.

தமிழகத்தில் அனைத்து அரசு டாஸ்மாக் மதுகடைகளிலும் மது பாட்டில் ஒன்றிக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் காலம் காலமாக இருந்து வருகிறது. இதுதொடர்பாக அரசு என்ன தான் நடவடிக்கை எடுத்தாலும், மதுப்ரியர்களுக்கான தீர்வு தான் இன்றளவும் கிடைத்தபாடில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அரசு டாஸ்மாக் மது கடையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுவதை கண்டித்து டாஸ்மாக் கடையின் கதவை பூட்டி மதுப்ரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதல் விலை
தமிழகத்தில் அரசு டாஸ்மாக் நிறுவனத்தால் மாநிலம் முழுவதும் 4,829 மதுக்கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடைகளை நவீனமயமாக்கவும், முறைகேடுகளை தடுக்கவும், பாட்டிலுக்கு ரூபாய் 10 கூடுதலாக வாங்குவதை தடுக்கவும் 'எண்ட் டூ எண்ட்' என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மது பாட்டில்கள் தொழிற்சாலையில் உற்பத்தியாவது முதல் கடைகளில் விற்பனையாவது வரை அனைத்து நகர்வுகளையும் கண்காணிக்க முடியும். அதேபோன்று ஊழியர்கள் எவ்வளவு மதுபானம் விற்றார்கள், எந்த வகை மது எந்த நேரத்தில் விற்பனையானது. எந்த மதுபாட்டில் குறைவாக வாங்கப்படுகிறது. எந்த ஊரில் எந்த மதுவிற்கு அதிக டிமாண்ட் இருக்கிறது. மதுபாட்டில்கள் விற்பனை குறித்து கணக்கு வழக்கு போன்ற அனைத்தையும் அறிய முடியும். மேலும் துல்லியமாக எல்லா நிகழ்வுகளை அரசால் கண்டுபிடித்துவிட முடியும். இதன் மூலம் கடையில் உள்ள கூடுதல் பணத்தை எளிதாக கண்டுபிடிக்கவும் முடியும்.
6 இடங்களில் புதிய திட்டம்
இந்த திட்டம் தற்போது காஞ்சீபுரம் (வடக்கு), காஞ்சீபுரம் (தெற்கு), அரக்கோணம், ராமநாதபுரம், கரூர், சிவகங்கை ஆகிய 6 வருவாய் மாவட்டங்களில் செயல்பாட்டில் உள்ளன. விரைவில் தமிழ்நாடு முழுவதும் கொண்டுவரப்பட உள்ளது. இந்த திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் , மதுக்கடைகளில் பணிபுரியும் விற்பனையாளரிடம் செல்போன் வடிவிலான 'ஸ்கேனர்' கருவியும், சிறிய வடிவிலான 'பில்' போடும் கருவியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 2 கருவிகளும் 'புளூடூத்' மூலம் இணைக்கப்பட்டிருக்கிறது. என்ன தான் திட்டத்தை அரசு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினாலும் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதை தடுக்க முடியவில்லை என்பது குடிமகன்களின் குற்றச்சாட்டமாக இருந்து வருகிறது.
தொடரும் விலை பிரச்சினை
இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட ஈசானிய தெருவில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக மதுப்ரியர்கள் சார்பில் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வந்தன. இதுபற்றி புகார் தெரிவித்த போதிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், டாஸ்மாக் கடையில் கூடுதல் பணம் வசூலிப்பதும் நிற்கவில்லை என்று கூறப்படுகிறது.
டாஸ்மாக் கடையை பூட்டி போராட்டம்
இந்நிலையில் பொறுத்து பொறுத்து பார்த்த மதுபிரியர்கள், பொறுமையிழந்து திடீரென பீர் பாட்டில் பொங்குவதை போன்று அவர்களும் பொங்கி எழுந்துள்ளனர். அங்கு மதுவாங்க திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட குடிமகன்கள் டாஸ்மாக் கடை செல்லும் நுழைவுவாயில் கதவை பூட்டி முற்றுகையிட்டு கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது ஈசானிய தெரு அரசு மதுபான டாஸ்மாக் கடையில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் அலுவலர்கள், பணியாளர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடிமகன்கள் முழக்கங்களை எழுப்பினர்.
காவல்துறையினர் சமரசம்
இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த சீர்காழி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மது பிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். அரசு நிர்ணயித்த விலைக்கு விற்க வேண்டும் என்ற கோரிக்கையை காவல்துறையினர் ஏற்றுக்கொண்டு, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தொடர்பாக டாஸ்மாக் கடை அலுவலர், பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மதுபிரியர்கள் கூறுகையில் ஈசானிய தெரு அரசு மதுபான டாஸ்மாக் கடையில் 190 ரூபாய் என விலை அச்சிடப்பட்ட 180 மில்லி அளவுக் கொண்ட மதுபானம் பாட்டில் 220 ரூபாய் என ரசீது கொடுத்துவிட்டு, 240 ரூபாய் க்கு விலைக்கு விற்பனை செய்கின்றனர் என்றும், சம்பந்தப்பட் டாஸ்மாக ஊழியர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

