Crime: அரிவாளை காட்டி மிரட்டல்! தப்ப முயன்ற ரவுடி... மாவுக்கட்டு போட்ட போலீஸ்...!
மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை வழக்கில் சாட்சியை மிரட்டிய ரவுடியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை வழக்கில் சாட்சியை மிரட்டிய ரவுடி காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க முன்றபோது வழுக்கி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
ரவுடி பட்டியல் பெயர்
மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் பல்லவராயன் பேட்டை மெயின்ரோட்டை சேர்ந்தவர் முருகேசன் என்பவரது மகன் 27 வயதான அபாயம் என்கிற சுதர்சன். மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ள இவர் மீது மயிலாடுதுறை, மணல்மேடு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு நிலையங்களில் ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற கொலை
கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் 20 -ம் தேதி மயிலாடுதுறையை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் அஜித்குமார் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கின் விசாரணை தற்போது மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
சாட்சிக்கு கொலை மிரட்டல்
இந்த நிலையில் மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில் மயிலாடுதுறை கலைஞர் காலனியை சேர்ந்த அந்தோணிசாமி என்பவரது மகன் 35 வயதான ராஜ்குமார் என்பவரை சுதர்சன் அரிவாளை காட்டி மிரட்டியுள்ளார். அப்போது அஜித்குமார் கொலை வழக்கில் தனது நண்பர்களுக்கு எதிராக சாட்சி சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று சுதாசன் மிரட்டியதாக கூறப்படுகிறது.
காவல்நிலையத்தில் புகார்
இது தொடர்பாக ராஜ்குமார் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் காவலர்கள் கொலை முயற்சி, ஆயுத தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுதர்சனை தேடி வத்தனர்.
பதுங்கியிருந்த சுதர்சன்
இந்நிலையில் பல்லவராயன்பேட்டை பகுதியில் சுதர்சன் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலை அடுத்து அந்த பகுதிக்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர். அப்போது சுதர்சன் காவல்துறையினரை கண்டவுடன் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார். இதனைக்கண்ட காவல்துறையினர் சுதர்சனை விரட்டி பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது சுதர்சன் தடுக்கி கீழே விழுந்துள்ளார்.
கால் எலும்பு முறிவு
இதையடுத்து காவல்துறையினர் அவரை பிடித்தபோது அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஓட முடியாமல் கீழே விழுந்தது தெரியவந்தது. இதனை அடுத்து சுதர்சனை மருத்துவமனையில் அனுமதித்து அங்கு எலும்புமுறிவு சிகிச்சை அளித்து, மாவுக்கட்டு கட்டப்பட்டு, பின்னர் அவரை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சுதர்சனை கடலூர் மத்திய சிறையில் கொண்டு சென்று அடைத்தனர்.





















