தொடரும் வெளிநாட்டு வேலை மோசடிகள்...பணம் கொடுத்து ஏமாந்த 50 பேர்..!
சீர்காழி அருகே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பாஜக பிரமுகர் 50 -க்கும் மேற்பட்டோரிடம் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக புகார் மனு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பெருந்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் ரகுமான். இவர் கொள்ளிடம் அருகே புத்தூரில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் அலுவலகம் வைத்துள்ளார். இந்நிலையில் ரகுமானிடம் வெளிநாடு வேலைக்கு செல்வதற்கு பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்ததாக 50க்கும் மேற்பட்டவர்கள் புகார் கொடுக்க சீர்காழி காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலகம் வந்திருந்தனர்.
இதில் திருப்பத்தூர், சீர்காழி, கொள்ளிடம், மயிலாடுதுறை, குத்தாலம், தைக்கால், கூத்தியம்பேட்டை, மணல்மேடு, திருவெண்காடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 50 -க்கும் மேற்பட்டவர்கள் பணம் கொடுத்ததற்கான புகைப்பட ஆதாரங்களுடன் சீர்காழி காவல்துணை கண்காணிப்பாளர் லாமேக்டிடம் புகார் மனு அளித்தனர். ரகுமான் ஒவ்வொருவரிடமும் 80 ஆயிரம் முதல் மூன்று லட்சம் வரை பெற்றுள்ளதாகவும், வேலைக்கு தகுந்தாற்போல் பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களிடம் பாஸ்போர்ட்டையும் பெற்றுக் கொண்டு கடந்த ஓராண்டு காலமாக அலைக்கழிப்பதாகவும் புகார் தெரிவித்தனர்.
மேலும், வெளிநாடு வேலை வேண்டாம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுங்கள் என கேட்பவர்களை மிரட்டுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டினர், மேலும், தங்களைப் போன்று 100க்கும் மேற்பட்டவர்களிடம் ரகுமான் இவ்வாறு தாய்லாந்து, துபாய், சவுதி உள்ளிட்ட நாடுகளுக்கு ஹோட்டல் வேலைக்கு அனுப்புவதாக பணம் பெற்றதாகவும் முதல் கட்டமாக நாங்கள் 50 பேர் ஒருங்கிணைந்து புகார் தர வந்துள்ளதாகவும் புகாரில் தெரிவித்துள்ளனர். காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து தங்களது பணத்தையும், பாஸ்போர்ட்டையும் மீட்டு தர வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கூறினர். மேலும், வெளிநாட்டு வேலை வாங்கி தருவாங்க இளைஞர்களின் ஆசையை தூண்டி கோடிகணக்கான ரூபாய் பணத்தை ஏமாற்றி விட்டு தற்போது ரகுமான் தன்னை பாதுகாத்து கொள்ள பிரபல தேசிய கட்சியில் இணைந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.
மயிலாடுதுறை அருகே கல்லூரி முதல்வருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்!
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மாதிரிமங்கலம் கிராமத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வட்டார சேவை மையத்தில் இயங்கி வருகிறது. இக்கல்லூரிக்கு புதிய கட்டிடம் மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை செய்து தரக்கோரி கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் கல்லூரி மாணவர்கள் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் சாலை மறியல் போராட்டம் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கல்லூரி முதல்வர் தரக்குறைவாக பேசியதாகவும், மாணவர்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மணிபாரதி, ரஞ்சித், பிரகாஷ் ஆகிய மூன்று மாணவர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் கல்லூரிக்கு வருகிற 14ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்களை மிரட்டியும், அவதூறாக பேசும் கல்லூரி முதல்வர் விஜயேந்திரனை பணிநீக்கம் செய்யக்கோரியும், கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டிதரக்கோரியம், தற்போது வட்டார சேவை மையத்தில் இயங்கி வரும் கல்லூரியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரியும் இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இணைந்து கல்லூரி முதல்வரை கண்டித்தும், மாணவர்களை பணி இடை நீக்கம் செய்ததை ரத்து செய்ய கோரியும் குத்தாலம் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஐயப்பன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.