Crime : 11 பெண்களை ஏமாற்றி திருமணம்... நகை,பணம் கொள்ளை.. குண்டூர் கல்யாண மன்னன் கைவரிசை
திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற வசதி படைத்த பெண்களை மட்டுமே மேட்ரிமோனி மூலம் கண்டுபிடித்து அவர்களுக்கு சிவ சங்கர் பாபு காதல் வலை வீசினார்.
ஆந்திரா, தெலங்கானாவில் சினிமா பட பாணியில் 11 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னனை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்ட பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
என்னதான் தண்டனைகள் கடுமையானாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை என்பது போல எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. குறிப்பாக திருமணம் என்ற பெயரில் நடைபெறும் மோசடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதில் ஆண், பெண் இருவரும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் இல்லை என்பது போல நூதன முறையில் மோசடி செய்வது பொதுமக்களையே தலைசுற்ற வைக்கும் அளவுக்கு உள்ளது.
அந்த வகையில் ஆந்திரா, தெலங்கானாவில் சினிமா பட பாணியில் 11 பெண்களை கல்யாண மன்னன் ஒருவன் ஏமாற்றி திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் சிவ சங்கர் பாபு என்பவர் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாகவும் தெரிவித்து திருமணத்திற்கு பெண் தேவை என்று மேட்ரிமோனி வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதன்மூலம் திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற வசதி படைத்த பெண்களை மட்டுமே மேட்ரிமோனி மூலம் கண்டுபிடித்து அவர்களுக்கு சிவ சங்கர் பாபு காதல் வலை வீசினார். அவர் கூறுவதையெல்லாம் உண்மை என நம்பி தங்கள் இரண்டாவது திருமணமாவது நன்றாக இருக்கட்டும் என நினைத்து சிலர் வாழ்க்கை கொடுக்க நினைத்து திருமணம் செய்துள்ளனர். அதன்படி வேலை விஷயமாக வெளியூர் செல்வதாக கூறி சில மாதங்களில் நகை மற்றும் லட்சக்கணக்கில் பணத்தை எடுத்துக்கொண்டு சிவ சங்கர் பாபு ஓடிவிடுவது வழக்கமாம். இதனால் தங்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விட்டதாக கூறி 11 பெண்கள் அவர் மீது புகாரளித்துள்ளனர்.
இந்த 11 பேரில் 7 பேர் கொண்டப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சியளிக்க கூடிய தகவலாக உள்ளது. இப்படி மாதம் ஒரு கல்யாணம், வாரம் ஒரு பெண் என வாழ்ந்து வந்த சிவ சங்கர் பாபு மீது தெலுங்கானாவில் உள்ள கூகட்பள்ளி, ஆர்.சி.புரம், பாலாநகர், ராய்துர்கம் சைபராபாத் ஆகிய காவல் நிலையங்களிலும், ஆந்திராவின் குண்டூர் மற்றும் அனந்தபூர் காவல் நிலையங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் போலீசார் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், மேலும் பலரை திருமணம் செய்து சிவ சங்கர் பாபு ஏமாற்றாமல் இருக்க உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நான் அவன் இல்லை சினிமா பட பாணியில் சிவ சங்கர் பாபு 11 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து இவர்களில் சிலர் தற்போது கர்ப்பமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்