மாமனாரை கொன்ற வழக்கில் ஜாமீனில் வெளிவந்த ராணுவவீரர் வெட்டிக்கொலை - மனைவி உட்பட 7 பேருக்கு வலைவீச்சு
’’நரேஷ் குமார் ஜாமீனில் விடுதலையான நிலையில், மீண்டும் மேற்கு வங்கத்திற்கு ராணுவப்பணிக்கு சென்று சில நாட்களுக்கு முன் சொந்த ஊர் திரும்பினார்’’
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள பண்ணந்தூர் இந்திரா நகர் காலனியை சேர்ந்த சொக்கலிங்கம் என்பவரின் மகன் நரேஷ்குமார் (40) மேற்கு வங்க மாநிலத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சசிகலா (36) என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். நரேஷ் குமாருக்கும், அவரது மனைவி சசிகலாவிற்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்த நிலையில் ஊர் மக்கள் சமாதானப்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் 6ஆம் தேதி தனது மாமனார் மகாலிங்கத்தின் வீட்டிற்கு சென்ற நரேஷ்குமார் அவரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இந்த நிலையில் சேலம் மத்திய சிறையில் இருந்து நரேஷ் குமார் ஜாமீனில் விடுதலையான நிலையில், மீண்டும் மேற்கு வங்கத்திற்கு ராணுவப்பணிக்கு சென்று சில நாட்களுக்கு முன் சொந்த ஊர் திரும்பினார்.
இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி பண்ணந்தூர் பகுதிக்கு நரேஷ்குமார் வந்த நிலையில் இதை அறிந்த அவரது மனைவி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள், நரேஷ்குமாரை சுற்றி வளைத்து கட்டையால் தாக்கி உள்ளனர். இதுமட்டுமின்றி நரேஷ் குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலத்த காயம் அடைந்த நரேஷ்குமாரை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது தொடர்பாக ஆரம்பத்தில் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்திருந்த பாரூர் காவல்துறையினர் தற்போது இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி உள்ளனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக பாரூர் காவல்நிலைய ஆய்வாளர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து, முன்னாள் ராணுவ வீரர் பரமேஸ்வரன் (38), நரேஷ்குமாரின் மனைவி சசிகலா, திருப்பூர் மாநகர ஆயுதப்படை காவலர் மகேஸ்வரன் (30), பரமேஸ்வரனின் மனைவி தீபா (35), மகேஸ்வரனின் மனைவி ராஜகுமாரி (27), வடிவேல் (30), சதீஷ் (27) ஆகிய 7 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். பட்ட பகலில் நடுரோட்டில் சொந்த மனைவியே கட்டிய கணவனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.