Kerala: மேக்கப் பெயரில் மேலாடையை அகற்றுவது.. அங்கங்களை தொடுவது... மணப்பெண்களை குறி வைத்த மேக்கப் மேன்!
கொச்சியில் மேக்கப்மேன் அனெஸ் அன்சாரே மீது 3 பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர்.
கேரளாவில் மணப்பெண்களிடம் அத்துமீறிய மேக்கப்மேனை போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த இரண்டு வாரங்களாக, கேரளாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் பிரச்னைகள் தலைதூக்கியுள்ளது. கொச்சியில் இன்க்ஃபெக்டட் ஸ்டுடியோவை நடத்தி வந்த டாட்டூ ஆர்ட்டிஸ்ட் சுஜீஷ் மீது பல பெண்கள் பாலியல் புகார் கூறியதை அடுத்து, கடந்த 3ஆம் தேதி சுஜீஷ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில், இப்போது மற்றொரு நபர் அதே குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார். மேக்கப்மேன் அனீஸ் அன்சாரி மீது 3 பெண்கள் கடந்த மார்ச் 10ஆம் தேதி கொச்சி போலீஸ் கமிஷனர் நாகராஜிடம் புகார் அளித்தனர்.
புகார் அளித்தவர்களில் ஒருவர் கூறுகையில், “அனீஸ் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது நிச்சயதார்த்த நாளில் தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார். அந்த அதிர்ச்சியை நீண்ட நேரம் உள்ளே வைத்து கொண்டேன். சமூகவலைதளத்தில் டாட்டூ ஆர்டிஸ்ட் சுஜீஷ் மீதான குற்றச்சாட்டுகளைப் பார்க்கும் வரை நான் வெளியே எதுவும் பேசவில்லை. அதன்பிறகு, இவ்வளவு நாள் என் மனதில் அடைத்து வைத்திருந்த அந்த அசிங்கத்தை வெளியே சொல்ல வேண்டும் என்று எண்ணியது. எனக்கு நடந்தது ஒரு தனி சம்பவம் அல்ல என்பதை நான் உணர்ந்தேன். எனக்கு மட்டும் அந்த சம்பவம் நடந்தது என்று கருதினேன். ஆனால், நான் தனியாக இல்லை என்பது எனக்கு தைரியத்தை அளித்தது” என்று கூறினார்.
பாலியல் வன்கொடுமை நடந்ததாகக் கூறப்படும் நாள் குறித்துப் பேசிய அவர், “திருமண நாளில் ஒரு பெண்ணின் மீது எந்த வகையான அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. என்ன தவறு நடந்தது என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் அப்படியே உறைந்து போனேன் பயந்தேன்” என்றார்.
அவரும் மற்ற இரண்டு பெண்களும் தங்கள் எழுத்துப்பூர்வ புகார்களை கமிஷனருக்கு அனுப்பியுள்ளனர். கமிஷனர் நாகராஜூ, அனீஸ்க்கு எதிரான புகார்களை பெண்கள் மின்னஞ்சல் செய்யலாம் என்று கூறினார்.
சுமார் 10 பெண்கள் அனீஸ் மீது புகார் கூறியுள்ளனர். மேலும், “InSolidarity2022” என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கப்பட்டதாகவும், அங்கு பாதிக்கப்பட்ட பெண்கள் சாட்சியங்களைப் பகிர்ந்துகொள்ள முன்வரலாம் மற்றும் அவர்கள் புகார் செய்ய விரும்பினால் சட்ட ஆலோசனையையும் உதவியையும் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னை குறித்த தகவல் போலீசாருக்கு தெரியவந்ததை அடுத்து, அவர் துபாய்க்கு தப்பித்து சென்றுள்ளார். அனீஸ் அன்சாரி மேக்கப் செய்ய வரும் பெண்களின் அனுமதியின்றி, அவர்களின் வயிறு உள்ளிட்ட சில பகுதிகளில் மேக்கப் போதுவது போல் தொடுவது, மசாஜ் செய்வது போன்ற சில்மிஷங்களில் ஈடுபட்டுள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. மேக்கப்போடுவதற்கு சென்ற இளம்பெண்ணின், மேலாடையை அவர் அனுமதியின்றி நீக்கியுள்ளார். மேலும், மலையாள நடிகைகளிடமும் அனீஸ் தனது சில்மிஷத்தை காட்டியிருக்கலாம் என்றும் போலீசார் கூறுவதால், அவரை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்