இன்ஸ்டாகிராம் மோகம்: பள்ளி மாணவன் கொடூரக் கொலை... பின்னணி என்ன?
கேரளாவில் இன்ஸ்டாகிராமில் சிறுமியுடன் பேசியதாக பள்ளி சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கேரளம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஸ்ரீகாரியம் பாங்கப்பாறை என்ற இடம் அமைந்துள்ளது. இங்குள்ள சங்கீத நகர் பகுதியைச் சேர்ந்தவர் மது. இவருக்கு தர்மஜா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ள நிலையில் மனைவியும், மகளும் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். மகன் அபிராம் அருகிலுள்ள பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.
வீடு திரும்பாத மாணவர்
இதனிடையே கடந்த நவம்பர் 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் மதியம் 3 மணியளவில் நண்பன் ஒருவரை சென்று பார்த்து விட்டு வருவதாக அபிராம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 10 நிமிடங்களில் திரும்பி வருவேன் என சொன்ன அச்சிறுவன் இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் தந்தை மது செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.
ஆனால் போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டதால் பல்வேறு இடங்களில் குடும்பத்தினர் தேடியுள்ளனர். எங்கு தேடியும் அபிராம் கிடைக்காததால் உடனடியாக ஸ்ரீகாரியம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் அபிராமிடம் இருந்த செல்போன் டவர் அடிப்படையில் அவன் கடைசியாக சென்ற இடம் மற்றும் சிறுவனின் சமூக வலைத்தளப் பக்கம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.
இதில் அபிராம் வீட்டை விட்டு வெளியேறும் முன் அவனுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பெண்ணின் பெயரில் இருந்து மெசெஜ் வந்துள்ளதும், அதில் மீட் பண்ண வருமாறும் தெரிவிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
புதருக்குள் வீசப்பட்ட சிறுவனின் உடல்
அதுமட்டுமல்லாமல் அபிராம் செல்போன் டவர் காட்டிய இடத்தில் சம்பந்தப்பட்ட நேரத்தில் இருந்த சிக்னல் அடிப்படையில் 17 மற்றும் 22 வயது சிறுவர்களை பிடித்தும் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அபிராம் கொலை செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தது போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
3 பேரும் கொடுத்த தகவலின் அடிப்படையில் அபிராம் உடல் பாங்கப்பாறை பேரூர் சந்திப்பு அருகே ஆள் நடமாட்டமில்லாத புதரில் இருந்து மீட்கப்பட்டது. உடலை ஒரு சாக்கில் வைத்து மூட்டையாக மாற்றி யாருக்கும் சந்தேகம் வராமல் அந்த கும்பல் வீசி சென்றது தெரிய வந்தது.
மாறிய டார்கெட்
இதனைத் தொடர்ந்து இந்த கொலைக்கான காரணம் என்ன விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் கிடைத்த தகவல்கள் எல்லாம் ஒரு கணம் இந்த உலகம் எங்கு சென்று கொண்டிருக்கிறது என நினைக்கும் அளவுக்கு மோசமாக இருந்துள்ளது. அதாவது குற்றவாளிகளுக்கு அபிராம் கொலை செய்யப்பட்ட வேண்டிய டார்கெட்டே கிடையாது. அவரின் நண்பர் தான் கொலை செய்யப்பட வேண்டியது லிஸ்டில் இருந்துள்ளார்.
சம்பவம் நடந்த நாளில் சிறுமியுடன் நெருங்கி பழகிய அபிராமின் நண்பரை தீர்த்துக் கட்டவே 22 வயது நபரான உமர் முக்தார் மற்றும் 17 வயது சிறுவன் ஆனந்தா முடிவு செய்துள்ளனர். அந்த சிறுவனை அச்சிறுமியின் இன்ஸ்டாகிராம் மூலம் மெசெஜ் செய்து வரவழைக்க முயன்றனர். ஆனால் வழக்கத்திற்கு மாறாக சந்திக்க வருமாறு கேட்டதால் சந்தேகமடைந்த அந்த சிறுவன் செல்லாமல் தவிர்த்துள்ளான்.
துரதிஷ்டவசமாக அபிராம் அங்கு சென்று மாட்டிக் கொண்டு உயிரையும் பறிகொடுத்தான். அச்சிறுவனை முதலில் கைகளால் தாக்கிய உமர் முக்தார் மற்றும் ஆனந்தா இருவரும் பின் பெல்ட்டால் கழுத்தை இறுக்கி கொன்றுள்ளனர். சம்பவம் நடந்தபோது அந்த சிறுமியும் அங்கே தான் இருந்ததையும் போலீசார் உறுதி செய்துள்ளனர். இந்த கொலை சம்பவம் கேரள மாநிலத்தையே உலுக்கியிருக்கிறது.
கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல் நடந்த இந்த கொலையில் பின்னணியில் சிறுமிக்கு சம்பந்தப்பட்ட சிறுவர்களால் ஏதேனும் தொல்லை கொடுக்கப்பட்டதா அல்லது வேறு எதுவும் முன் விரோதம் இருந்ததால் கொலை நடந்ததா என போலீசார் அடுத்தக்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்























