கேரளாவில் மேலும் ஒரு வரதட்சணை சோகம் : தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் தந்தை!
அவர் தான் இறப்பதற்கு முன்பு பதிவு செய்து வெளியிட்ட வீடியோ மனதைப் பதறச் செய்வதாக அமைந்துள்ளது. அண்மையில்தான் அவரது உறவினர்கள் அவரது அலைபேசியில் இந்த வீடியோ பதிவைக் கண்டுபிடித்துள்ளனர்.
கேரளாவில் வரதட்சணைக் கொடுமைகளால் ஏற்படும் மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் கேரளாவின் மலப்புரம் மாவட்டம் மம்பாடைச் சேர்ந்த மூஸக்குட்டி என்பவரின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது மகளுக்கு ஏற்பட்ட வரதட்சணைக் கொடுமையைக் காணச் சகிக்காமல் தற்கொலை செய்துகொண்டுள்ளார் 46 வயதான மூஸக்குட்டி. அதுகுறித்து அவர் தான் இறப்பதற்கு முன்பு பதிவு செய்து வெளியிட்ட வீடியோ மனதைப் பதறச் செய்வதாக அமைந்துள்ளது. கடந்த செப்டம்பர் 23 அன்று மூஸக்குட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார். என்றாலும், அண்மையில்தான் அவரது உறவினர்கள் அவரது அலைபேசியில் இந்த வீடியோ பதிவைக் கண்டுபிடித்துள்ளனர்.
மூஸக்குட்டியின் மகள் ஹீபாவுக்கு வயது 20. இரண்டு வருடங்களுக்கு முன்பு ஹமீது என்பவருடன் அவருக்கு திருமணம் செய்துவைத்துள்ளார் மூஸக்குட்டி. இவர்களுக்கு ஐந்து மாதத்தில் ஒரு குழந்தையும் உள்ளது. ஹீபாவை ஹமீது வரதட்சணைக் கேட்டுத் தொடர்ந்து கொடுமை செய்துவந்த நிலையில் தனது தந்தையுடன் வீட்டில் சில மாதங்களாக வசித்து வருகிறார் ஹீபா.
தனது மகளுக்கு நடந்த கொடுமையை மூஸக்குட்டி தட்டிக் கேட்கச் சென்ற இடத்தில் அவரை அவமானப்படுத்தியுள்ளார் ஹமீது. ’உங்களது மகளைத் தற்காலிகமாகத்தான் இந்த வீட்டில் வைத்திருந்தேன்’ என ஹமீது கூறியதைக் கேட்டு மணமுடைந்த மூஸக்குட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தனது வீடியோ பதிவில், ‘ஏற்கெனவே ஹமீதுக்கு 18 சவரன் தங்கம் வரதட்சணையாகக் கொடுத்துவிட்டேன்.ஆனால் அவன் மேலும் அதிகமாக வரதட்சணை கேட்டு என் மகளைக் கொடுமைப்படுத்தியுள்ளான். 5 வருடத்துக்கான கொடுமையை தான் ஒரே வருடத்தில் அனுபவித்ததாக அவள் என்னிடம் கூறியபோது நான் துடித்துவிட்டேன்’ எனக் கதறியபடியே அந்த வீடியோவில் பேசியுள்ளார் மூஸக்குட்டி.
Kerala govt declares November 26 as Dowry Prohibition Day; all male govt employees to give declaration of not having taken dowry
— Bar & Bench (@barandbench) July 24, 2021
report by @GitiPratap #kerala #dowry
Read more here: https://t.co/2mMJDssPiG pic.twitter.com/lJkCWY4i8H
முன்னதாக, இனி ஒவ்வொரு வருடமும் 26 நவம்பர் அன்று வரதட்சணைத் தடுப்பு தினமாக அனுசரிக்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. அந்த நாளில் கேரள அரசில் பணியில் இருக்கும் ஆண் ஊழியர்கள் அனைவரும் வரதட்சணை பெறமாட்டோம் என உறுதியளிக்க வேண்டும் என அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த நாளில் பள்ளி கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் தாங்கள் வரதட்சணை பெறவோ அல்லது கொடுக்கவோ மாட்டோம் என உறுதியேற்க வேண்டும் எனவும் அரசு வரதட்சனைத் தடுப்பு திருத்தச் சட்டம் 2021ன் கீழ் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதே நிரம்பிய இளம் பெண் விஸ்மயா மர்மமான முறையில் தன்னுடைய கணவர் வீட்டில் இறந்திருந்தார். இவருடைய மரணத்திற்கு கணவர் கிரண் குமாரின் குடும்பம் தான் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. மேலும் கிரண் குமார் காவல்துறையினரிடம் சரண் அடைந்துள்ளார். இதுமட்டுமின்றி மேலும் 2 பெண்கள் தங்களுடைய கணவர் வீட்டில் இறந்துள்ளது தெரியவந்துள்ளது. ஆலப்புழா மாவட்டத்தின் வள்ளிகுன்னம் பகுதியைச் சேர்ந்தவர் சுசித்ரா(19) என்பவர் தற்கொலை செய்துகொண்டார். இந்த தற்கொலை மரணம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுசித்ராவின் தற்கொலைக்கு உரிய காரணம் இன்னும் தெரியவில்லை. அதேபோல, வெங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் அர்ச்சனா(24) என்பவர் தன்னுடைய கணவர் வீட்டில் மர்மமான முறையில் தீக்காயங்களுடன் இறந்துள்ளார். கேரளாவில் கடந்த சில நாட்களுக்குள் 3 பெண்கள் தங்களுடைய கணவரின் வீட்டில் மர்மமான முறையில் இறந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மரணங்களுக்கெல்லாம் பிரதான காரணமாக சொல்லப்படுவது வரதட்சணை கொடுமை. கேரளாவில் மட்டுமே 13 ஆண்டுகளில் 212 மரணங்கள் வரதட்சணை கொடுமையால் அரங்கேறியுள்ளது. இது காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட மரணங்கள் மட்டுமே. மகளுக்கான அன்பளிப்பு, எங்களால் முடிந்த பரிசு என பெண் வீட்டார் கொடுத்துப்பழக்கப்பட்ட வரதட்சணை உயிர்களை காவு வாங்கத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே வரதட்சணை தடுப்புச் சட்டத்தை முழு அளவில் அமல்படுத்தாதது ஏன் என்று கேரள அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது. 2004 முதல் வரதட்சணை தடுப்புச் சட்ட விதிமுறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை நீதிமன்றத்திற்கு தெரிவிக்கும்படியும் நீதிபதிகள் எஸ்.மணிகுமார், நீதிபதி ஷாஜி பி சாலி உத்தரவிட்டனர்.வரதட்சணை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கோரி விக்ரம் சாரா பாய் அறிவியல் பவுண்டேஷன் தலைமைச் செயல் அலுவலர் இந்திரா ராஜன், கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதற்கிடையேதான் தற்போது சட்டதிருத்தத்தைக் கொண்டுவந்திருக்கும் அரசு 26 நவம்பர் அன்று வரதட்சணை தடுப்பு தினமாக அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது.
தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050