கஞ்சா விற்பனையில் போட்டா போட்டி! பெற்றோர் கண் முன்னே 20 வயது இளைஞர் கொடூர கொலை! நடந்தது என்ன?
Kanchipuram Murder : " பார்வேந்தனின் வீட்டிற்கு சென்று கதவை தட்டி பார்வேந்தன் தாய் தந்தை கண்ணெதிரே அவரது தம்பியான உதயநிதியை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்"
காஞ்சிபுரம் அருகே கஞ்சா விற்பனை செய்வதில் போட்டா போட்டி, முன்விரோதம் காரணமாக 20 வயது இளைஞர் பெற்றோர்கள் கண் முன்னே வெட்டி படுகொலை, பாலு செட்டி சத்திரம்,மற்றும் காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் விசாரணை.
கஞ்சா விற்பனை
காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி அகரம் கிராமம் பகுதியை சேர்ந்தவர் கோதண்டம். இவர் உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீஸராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு பார்வேந்தன், உதயநிதி என இரு மகன்கள் உள்ளனர். பார்வேந்தன் உதயநிதி இருவரும் பட்டப்படிப்பு படித்துள்ள நிலையில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் மீது பாலு செட்டி சத்திரம் காவல் நிலையத்தில் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
பார்வேந்தன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தாபா ஹோட்டல் ஒன்றில் தகராறு செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு கை உடைந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்தநிலையில் அதே பகுதியைச் சார்ந்த மணிகண்டன் என்பவர் பகவதி மற்றும் விக்கி உள்ளிட்ட நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா மற்றும் மணல் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருவதால் பார்வேந்தனுக்கும் மணிகண்டனுக்கும் தொழில் போட்டி ஏற்பட்டு உள்ளது.
போட்டா போட்டி
இந்நிலையில் தொழில் போட்டி, முன் விரோதமாக உருவெடுத்து இருந்த நிலையில், அவ்வப்போது அடிதடியிலும் ஈடுபட்டு உள்ளனர். பார்வேந்தன் சிறையில் உள்ளதால், அவரது தம்பியான உதயநிதியும், தனது நண்பரான படுநெல்லி கிராமத்தை சேர்ந்த கிரி (22) என்பவரும் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்வதில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. பார்வேந்தன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த மயானகொள்ளை விழாவின் போது மணிகண்டன் குழுவினரை மிரட்டி 10,000 ரூபாய் பணம் பெற்று உள்ளார்.
இதனால் பார்வேந்தன் மற்றும் மணிகண்டன் குழுவினருக்கு அடிதடி ஏற்பட்டு பாலு செட்டி சத்திரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு சுமார் 1 மணியளவில் மணிகண்டன், பகவதி, விக்கி உள்ளிட்ட மேலும் சிலர் பார்வேந்தனின் வீட்டிற்கு சென்று கதவை தட்டி பார்வேந்தன் தாய் தந்தை கண்ணெதிரே அவரது தம்பியான உதயநிதியை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். இதனை தொடர்ந்து மணிகண்டன், பகவதி, விக்கி உள்ளிட்ட கும்பல் கோவிந்தவாடி அகரம் அடுத்த படுநெல்லி கிராமத்திற்கு சென்று உதயநிதியின் நண்பரான கிரியையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தலைமறைவாகி விட்டனர்.
அலறும் கிராம மக்கள்
படுகாயம் அடைந்த கிரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவங்கள் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாலுச்செட்டி சத்திரம் மற்றும் காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் உதயநிதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு கொலை குற்றவாளிகளை பிடிக்க நான்கு தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட தொழில் போட்டியாலும் முன் விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது மற்றொருவர் அடைந்துள்ள சம்பவம் கோவிந்தபாடி மற்றும் படுநெல்லி கிராமத்தில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.