முகப்புக்ரைம்மர்ம நபரிடம் இருந்து வந்த ஃபோன் கால்..! காஞ்சிபுரம் எம்எல்ஏ வீடு, ஜவுளி கடைக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
மர்ம நபரிடம் இருந்து வந்த ஃபோன் கால்..! காஞ்சிபுரம் எம்எல்ஏ வீடு, ஜவுளி கடைக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல பட்டு துணி கடைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டனர்
By : கிஷோர் | Updated at : 04 Nov 2023 09:07 PM (IST)
எம்.எல்.ஏ
காஞ்சிபுரம் முழுவதும் கோவில் நிறைந்திருப்பதால் கோவில் நகரம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அதைத் தாண்டிலும் காஞ்சிபுரம் உலகம் முழுவதும் புகழ்பெற்றதற்கு மிக முக்கிய காரணமாக காஞ்சிபுரம் பட்டு விளங்கி வருகிறது. காஞ்சிபுரம் நகர் முழுவதும் பல கூட்டுறவு சொசைட்டிகள் மூலம், கைத்தறியில் தயாரிக்கப்படும் பட்டுகள் தனித்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு மட்டுமில்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான மக்கள் பட்டு சேலை எடுப்பதற்கு காஞ்சிபுரத்தில் படையெடுத்து வருகின்றனர்.
எந்த அளவிற்கு கூட்டுறவு சொசைட்டிகள் மூலம் பட்டு வியாபாரம் செய்யப்படுகிறது அதைவிட அதிகமாக தனியார் பட்டு கடைகளும் காஞ்சிபுரம் நகர் முழுவதும் நிறைந்திருக்கின்றன. காஞ்சிபுரம் நகர் முழுவதும் பல பிரபல பட்டு ஜவுளி கடைகள் செயல்பட்டு வருகின்றன. தனியார் பட்டு ஜுவல்லரி கடைகளில் துணி எடுப்பதற்கு தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில், இருந்து பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர்.
பிரபல தனியார் ஜவுளி கடைக்கு வெடிகுண்டு மிரட்டல்.
அந்த வகையில், காஞ்சிபுரம் நடுத்தெரு பகுதியில் செயல்படும் தனியார் பட்டு சேலை விற்பனை கடையான ஏ.எஸ்.பாபு நிறுவனத்தில் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி காரணமாக பட்டு சேலை கடையில் இருந்த அனைத்து வாடிக்கையாளர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டு போலீசார் வெடிகுண்டு தேடும் பணியை மேற்கொண்டு தீவிரமாக ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறையினர்களுக்கு குவிக்கப்பட்டதால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. வாடிக்கையாளர்களும் பத்திரமாக ஒவ்வொருவராக கடையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
காவல்துறையினர் ஜவுளி கடைக்குள் சென்று பல்வேறு இடங்களில் வெடிகுண்டு சோதனை மேற்கொண்டனர். மோப்ப நாய் உதவியுடன் நடைபெற்ற வெடிகுண்டு சோதனை முடிவில் எந்தவித சந்தேகத்திற்கிடமான பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சுமார் 1:30 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற, இந்த சோதனை காரணமாக அப்பகுதி முழுவதும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதனை அடுத்து சைபர் கிரைம் உதவியுடன் அழைப்பு வந்த தொலைபேசி என் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சோதனை முடிவில் எந்த மர்ம பொருட்களும் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், தொடர்ந்து அப்ப பகுதிக்கு போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
எம்எல்ஏ வீட்டிற்கு வெடிகுண்டும் மிரட்டல்
அதே சமயத்தில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினராக உள்ள சி.பி.எம்.பி எழிலரசன் இல்லத்திற்கும் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது வெடிக்க இருப்பதாகவும் மர்ம நபர் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மூலமாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, போலீசார் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை மேற்கொண்டனர். டிடெக்டர் உள்ளிட்ட கருவிகள் மூலம் சோதனை செய்ததில் எந்த மர்ம பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் இல்லம் மற்றும் அவரது அலுவலகத்திற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து காஞ்சிபுரம் நகர் பகுதியில் இரண்டு இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அடுத்து நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோன்று சைபர் கிரைம் உதவியுடன் சம்பந்தப்பட்ட தொலைபேசி எண்ணின் லொகேஷன் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து இதுகுறித்து 3 தனி படை அமைத்து போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.