புதுச்சேரி: அரியாங்குப்பத்தில் 5 கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை - பதற்றத்தில் வணிகர்கள்...!
’’கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, நள்ளிரவு 2 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடைகளின் பூட்டுகளை உடைப்பது பதிவாகி இருந்தது’’
![புதுச்சேரி: அரியாங்குப்பத்தில் 5 கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை - பதற்றத்தில் வணிகர்கள்...! In Ariyankuppam area, mysterious persons broke the locks of 5 shops in a row overnight and seized them புதுச்சேரி: அரியாங்குப்பத்தில் 5 கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை - பதற்றத்தில் வணிகர்கள்...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/19/f6a9441906e8a68ef6d10bdcaf5e7f95_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
புதுச்சேரியில் உள்ள வில்லியனூர், அரியாங்குப்பம் பகுதியில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 5 கடைகளின் பூட்டை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். வில்லியனூரை அடுத்த அரசூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (40). இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். தினமும் காலை 7 மணிக்கு கடையை திறந்து இரவு 10 மணியளவில் மூடுவது வழக்கம். இரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு கோவிந்தராஜ் வீட்டுக்கு சென்றார். காலை கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார். கல்லா பெட்டியில் வைத்திருந்த 40 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
மேலும் இவரது கடையின் அருகில் திலாசுப்பேட்டையை சேர்ந்த வெங்கடேஷ் (35) என்பவர் போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக மூடப்பட்டிருந்த இந்த கடையின் பூட்டும் உடைக்கப்பட்டு, 25 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த கேமரா, பிரிண்டர் மற்றும் மெமரி கார்டு, பென் டிரைவ் உள்ளிட்ட பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த வில்லியனூர் போலீஸ் உதவி ஆய்வாளர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த கடைகளை பார்வையிட்டனர். இது தொடர்பாக கோவிந்தராஜ், வெங்கடேசன் ஆகியோர் தனித்தனியாக அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
அரியாங்குப்பம் அருகே டோல்கேட் கிராமத்தை சேர்ந்த லட்சுமிபதி (60). எல்.ஐ.சி. முகவராக பணியாற்றி வருகிறார். இவர் தனது வீட்டின் கீழ் பகுதியில் உள்ள அறையை அலுவலகமாக பயன்படுத்தி வரும் நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அலுவலகத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. மேலும் இவரது அலுவலகத்தின் அருகே உள்ள வெல்டிங் கடை மற்றும் காலியாக உள்ள மற்றொரு கடைகளின் பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கு ஏதும் இல்லாததால் திரும்பி சென்றுவிட்டனர்.
அடுத்தடுத்து கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டது பற்றி அறிந்த அரியாங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொள்ளை நடந்த அலுவலகம் மற்றும் கடைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, நள்ளிரவு 2 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடைகளின் பூட்டுகளை உடைப்பது பதிவாகி இருந்தது. இது குறித்து லட்சுமிபதி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லியனூர், அரியாங்குப்பம் பகுதியில் அடுத்தடுத்து ஒரே நாள் இரவில் 5 இடங்களில் கொள்ளை சம்பவம் அரங்கேறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
CSK vs MI Live: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் லைவ் ஸ்கோர் அப்டேட்ஸ்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)