வீட்டிலேயே கிளினிக்.. சிக்கிய கருமுட்டை விற்பனை கும்பல்! ஒரே பெண்ணிடம் 30-க்கும் மேற்பட்ட முறை!
ஏழை பெண்களை குறி வைத்து கருமுட்டை திருடிய கும்பல் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தை அடுத்துள்ள பத்லாபூர் பகுதிகளில் பெண்களிடம் சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்து விற்பனை செய்யப்படுவதாக அமலாக்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கருமுட்டையை எடுக்கும் பத்லாபூர் கிளினிக்கில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து மருத்துவர் உள்பட 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
கருமுட்டை எடுக்கும் கும்பல்
இதனையடுத்து காவல் நிலையத்தில் அழைத்து சென்று விசாரணை நடத்திய போது பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது இதுவரை 40க்கும் மேற்பட்ட பெண்களிடம் கருமுட்டையை எடுத்து இருப்பது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு முறையும் கருமுட்டையை எடுக்க பெண்களுக்கு ரூ.25,000 முதல் 35,000 வரை பணம் கொடுத்து விட்டு வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளனர். அதோடு வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கருமுட்டையை பெண்களிடமிருந்து எடுக்க முடியும் என்ற நிலை இருக்கும்போது இக்கும்பல் ஒவ்வொரு பெண்ணிடம் பல முறை இது போன்று கருமுட்டையை எடுத்தது தெரியவந்தது.
ஒரே பெண்ணிடம் 33 முறை
இதில் அதிர்ச்சி தரும் தகவல் என்னவென்றால் ஒரு பெண்ணிடம் 30க்கும் மேற்பட்ட முறை கருமுட்டையை எடுத்துள்ளது தெரியவந்தது. இதற்காகவே மருத்துவர் சுலக்சனா தனது வீட்டை கிளினிக்காக மாற்றி அங்கேயே மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் சட்டவிரோதமாக சோனோகிராபி எடுத்தல், பாதுகாப்பற்ற முறையில் செயற்கை கருத்தரித்தல் முறையை மேற்கொள்ளுதல் போன்றவையும் நடந்தது தெரிய வந்துள்ளது.
அமலாக்கப்பிரிவு தீவிர விசாரணை
தற்போது இந்தச் சங்கிலித் தொடர் மோசடியில் தொடர்புடைய பிற ஏஜெண்டுகள், உடந்தையாக இருந்த மருத்துவர்கள் மற்றும் பிற கிளினிக்கள் குறித்தும் அமலாக்கப்பிரிவு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.முழு விசாரணைக்கு பிறகு பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏழைப் பெண்களிடம் கருமுட்டை எடுத்து அதிக விலைக்கு விற்பனை செய்த கும்பல் பிடிப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















