9 வயது சிறுவன் கழிவறையில் தற்கொலை: சீருடை கேலி காரணமா? அதிர்ச்சியில் குடும்பம்
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் பள்ளியில் சீருடை சரியாக அணியாததால் கேலி செய்யப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

ஹைதராபாத்: சீருடை சரியாக அணியாததால் பள்ளியில் கேலி செய்யப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான ஒன்பது வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் ஹைதராபாத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சந்தாநகரைச் சேர்ந்த 4 ஆம் வகுப்பு மாணவன் பிரசாந்த் செவ்வாய்க்கிழமை (நேற்று) மாலை தனது வீட்டின் கழிப்பறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
பிரசாந்த் பள்ளியிலிருந்து வீடு திரும்பியதும் வருத்தமாக இருந்துள்ளார். சம்பவம் நடந்த நேரத்தில், அவர் வீட்டில் தனியாக இருந்தார். அவர், குளியலறைக்குள் சென்று தனது பள்ளி அடையாள அட்டையை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால், குடும்ப உறுப்பினர்கள் கவலையடைந்து கதவைத் தட்டினர். எந்த பதிலும் கிடைக்காததால், அவர்கள் கதவை உடைத்துக்கொண்டு பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அதிர்ச்சியில் குடும்பம்
பிரசாந்தின் தந்தை சங்கர், குடும்பம் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாகப் பணிபுரிகிறார், தனது மகன் வழக்கமாக மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பான், முன்பு எந்த மன அழுத்த அறிகுறிகளும் காணப்படவில்லை. பிரசாந்த் படித்த அதே பள்ளியில் சங்கர் முன்பு ஓட்டுநராகப் பணிபுரிந்தார். இந்தக் குடும்பம் முதலில் மேடக் மாவட்டத்தில் உள்ள கோத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தது. சங்கர் மற்றும் அவரது மனைவி பார்வதிக்கு பிறந்த மகன்களில் பிரசாந்த் இளையவர்.சம்பவம் நடந்த நேரத்தில் பிரசாந்தின் தாயார் வீட்டில் இல்லை என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர். குடும்ப உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு தோழர்களின் வாக்குமூலங்கள் மூலம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
சீரூடை பற்றி கேலி செய்தார்களா?
பிரசாந்தின் பள்ளிச் சீருடையைப் பற்றி வகுப்புத் தோழர்கள் அவரை கேலி செய்தார்களா அல்லது அன்று பள்ளியில் அவர் கண்டிக்கப்பட்டாரா, அதுவே அவரது மன உளைச்சலுக்குக் காரணமாக இருக்கலாம் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். சைபராபாத் கமிஷனரேட்டின் கீழ் உள்ள சந்தாநகர் காவல் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் மரணம் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)





















