சித்தூர் | பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு துன்புறுத்தியதாக புகாரளித்த மனைவி : கணவன் தலைமறைவு
தனது கணவன் தவறான பெண்கள் சவகாசம் மற்றும் குடி உள்ளிட்ட தீய பழக்கங்களுக்கு அடிமை ஆகியுள்ளதால் , அதற்கு பணம் கேட்டு என்னை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயல்வதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார் .
ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள Y S காலனி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீநாத் . இவர் தன்னுடைய உறவினர்களை சந்திக்க அடிக்கடி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள V C மோட்டூர் பகுதிக்கு வருவது வழக்கம். இந்த சூழ்நிலையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீநாத் ராணிப்பேட்டை வந்திருக்கும் போது V C மோட்டூர் பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்த ஜபீனா என்ற 14 வயது சிறுமியை காதலித்து , பின்பு முஸ்லீம் மதத்திற்கு மாறி , ஸ்ரீநாத் என்ற தனது பெயரை முகமத் ரபி என்று மாற்றம் செய்து முஸ்லீம் முறைப்படி ஜபீனாவை கடந்த செப்டம்பர் மாதம் 2011-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் திருமணம் முடிந்த கையுடன் ஆந்திரா சென்ற ஜபீனா ,முகமத் ரபி தம்பதியினர் முகமத் ஷபி (8) மற்றும் முகமத் ஹசன் (6) என்ற இரு மகன்களுடன் வாழ்ந்து வந்தனர் .
கடந்த இரண்டு வருடமாக தனது கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜபீனா தன் கணவர் ரபியை பிரிந்து தனது இரு மகன்களுடன் அவருடைய பெற்றோர் வீட்டுக்கு திரும்பி வந்துவிட்டார் ,
இந்நிலையில் நேற்று இரவு ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் வந்த அவர் , தனக்கும் தனது இரு மகன்களின் உயிருக்கும் தனது கணவனால் ஆபத்து உள்ளது என்றும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் காவல் நிலைய ஆய்வாளர் இடம் புகார் அளித்தார். மேலும் தனது கணவன் தன்னை விபச்சாரத்தில் ஈடுபடுமாறு சித்ரவதை செய்வதாகவும் ஒரு அதிர்ச்சி தகவலை தெரிவித்தார் .
ABP நாடு செய்தி குழுமத்திடம் பேசிய ஜபீனா "எனக்கு 14 வயது இருக்கும் பொழுதே ஸ்ரீநாத் என்னை காதலித்து திருமணம் செய்து கொண்டார் , இப்பொழுது எனக்கு 24 வயது நிறைவு பெறப்போகிறது. கல்யாணமான சில மாதங்களிலே மது பழக்கத்துக்கு அடிமையான எனது கணவர், என்னை முஸ்லீம் மதத்திலிருந்து இருந்து இந்து மதத்திற்கு மாறும்படி கட்டாயப்படுத்தினார். அதற்கு நான் மறுப்பு தெரிவிக்கவே என்னை சித்ரவதை செய்ய தொடங்கினார். நாள் போக்கில் எனது கணவருக்கு அங்கு உள்ள தவறான பெண்களுடன் பழக்கம் ஏற்பட்டு , அவர்களை வீடு வரை அழைத்து வர ஆரம்பித்தார். குடி பழக்கத்திற்கு முழுமையாக அடிமை ஆன என் கணவர், மது உள்ளிட்ட பிற தீய பழக்கங்களுக்கு அதிக அளவில் பணம் தேவைப்பட்டதால் என்னை விபச்சாரத்தில் ஈடுபடுமாறு வற்புறுத்தினார் , நான் மறுக்கவே என்னையும் எனது இரு மகன்களையும் தாக்கி துன்புறுத்த ஆரம்பித்தார். அவருடைய சித்ரவதைகளை தாங்க முடியாமல் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு எனது பெற்றோர் வீடு இருக்கும் ராணிப்பேட்டைக்கு வந்துவிட்டேன்.
இந்த சூழ்நிலையில் வியாழன் இரவு ராணிப்பேட்டை வந்த எனது கணவர் , என்னை ஆந்திராவுக்கு வரும்படி வற்புறுத்தினார். நான் மறுக்கவே என்னையும் எனது இரு குழந்தைகள் மற்றும் வீட்டில் இருந்த எனது குடும்பத்தினர் அனைவரையும் கடுமையாக தாக்கிவிட்டு அங்கு இருந்து தப்பி சென்றுவிட்டார். ராணிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாங்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு புகார் செய்துள்ளோம் என்று தெரிவித்தார். இது தொடர்பாக ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வாசுகியை தொடர்பு கொண்டபொழுது , ஜபீனா அளித்த புகாரின் பேரில் ஸ்ரீநாத் என்கிற முகமத் ரபியை கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறோம். தற்பொழுது அவர் தலைமறைவாக உள்ளதாக தகவல் வந்துள்ளது , அவரை தேடும் பணியை முடுக்கிவிட்டுள்ளோம் என்று தெரிவித்தார் .