நிதி நிறுவனத்தில் பொது மேலாளர் பணத்துடன் எஸ்கேப்... சேலத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் முற்றுகை.
"நீங்கள் என்னை நம்பி பணம் செலுத்தவில்லை, கொடுத்தவரிடம் போய் கேளுங்கள்" என்று அலட்சியமாக பதில்.
சேலம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அமுத்சுரபி என்கின்ற தனியார் நிதி நிறுவனம் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. சிறு, குறு தொழில் செய்யும் வியாபாரிகளிடம் தினசரி பணத்தைப் பெற்றுக் கொண்டு அதனை வட்டியுடன் ஆண்டின் இறுதியில் முழு தொகையாக கணக்கிட்டு வழங்கியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் 85 கிளைகளைக் கொண்டு இயங்கி வரும் நிதி நிறுவனத்தை பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் கிளைகளை திறந்து வைத்துள்ளனர். இந்த நிதி நிறுவனத்தின் பொது மேலாளர் பிரேம் ஆனந்த் என்பவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் சிறிது சிறிதாக நிறுவனத்தின் தொகையை பிரேம் ஆனந்த் வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார். கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி பிரேம் ஆனந்த் நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து 30 கோடி ரூபாயை திருடி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சேலம் மாவட்ட காவல் ஆணையாளரிடம் அமுத்சுரபி நிறுவனத்தினர் புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் சில தினங்களாக நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் பணம் செலுத்திய வாடிக்கையாளர்களிடம் எந்தவித தொடர்பும் இல்லாததால் சந்தேகம் அடைந்த வாடிக்கையாளர்கள் இன்று சேலம் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் தலைமை அலுவலகத்தில் ஒன்று கூடினர். வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை திருப்பி கேட்டப்போது நிறுவனத்தின் தலைமை அதிகாரி "நீங்கள் என்னை நம்பி பணம் செலுத்தவில்லை, கொடுத்தவரிடம் போய் கேளுங்கள்" என்று அலட்சியமாக பதிலளித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த வாடிக்கையாளர்கள் அமுத்சுரபி நிறுவனத்தில் உள்ளிருப்பு போராட்டம் செய்து வருகின்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் கூறுகையில், "நாங்கள் அனைவரும் சிறு தொழில் செய்பவர்கள், தினசரி வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை சேமிப்பதற்காக இந்த நிறுவனத்தில் பணம் செலுத்தினோம். தாங்கள் செலுத்திய பணத்தை அமுத்சுரபி நிதி நிறுவனம் மோசடி செய்து விட்டது. எனவே எங்களது பணத்தை திரும்பி செலுத்திவிட்டு, மோசடியில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய வேண்டும்" என்று கூறினர்.
பின்னர் நிதி நிறுவனத்தின் தலைமை அதிகாரி கூறுகையில், "இங்கு பொது மேலாளர் ஆக பணிபுரிந்த பிரேம் ஆனந்த் என்பவர் பணத்தை திருடி சென்றதாகவும், இது குறித்து ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டுள்ளது" என்றும் கூறினார். மேலும் அமுத்சுரபி நிறுவனத்தை வேறு நிறுவனத்துடன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வாடிக்கையாளர்கள் செலுத்திய தொகையை ஒரு மாதத்தில் செலுத்தப்படும் என்று உறுதியளித்தார்.