குறுக்கே வந்த நாய்.. நொறுங்கிய கார்.. நான்கு மாணவர்கள் உயிரிழப்பு.. நடந்தது என்ன ?
Kelambakkam accident : செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற கொடூர விபத்தில், கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சென்னை அருகே கேளம்பாக்கத்தில் அமைந்துள்ள செட்டிநாடு தனியார் சட்டக்கல்லூரி உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஐந்தாண்டு மற்றும் மூன்றாண்டு சட்டப்படிப்பு படித்து வருகின்றனர். நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் 4ஆம் ஆண்டு படிக்கும் மகா ஸ்வேதா (21), பவித்ரா (21), கர்லின் பால் (21), 3ஆம் ஆண்டு படிக்கும் லிங்கேஸ்வரன் (23), சிவா (23) ஆகிய ஐந்து பேரும் ஒரு காரில் கேளம்பாக்கம் கல்லூரி முடித்து விட்டு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளத்திற்கு சென்றனர்.
பறந்து சென்ற கார்
அங்குள்ள ஓட்டல் ஒன்றில் டீ சாப்பிட்டு விட்டு படூர் புறவழிச்சாலை வழியாக புதிய சாலையில் காரில் வந்து கொண்டிருந்தனர். காரை மாணவர் சிவா ஓட்டி வந்துள்ளார். கேளம்பாக்கம் - படூர் புறவழிச்சாலையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் அருகே இருந்து புறப்பட்டு படூர் நோக்கி அதி வேகமாக வந்து கொண்டிருந்தபோது, நிலை தடுமாறி இடது புறம் முள் புதருக்குள் முள் புதருக்குள் கால் பறந்து சென்று 4 முறை உருண்டுள்ளது.
சுக்கு நூறாக நொறுங்கிய கார்
இதனால் சுமார் 400 அடி தூரத்திற்கு தாண்டி தனியார் கல்லூரி வளாகத்தின் உள்ளே விழுந்து நொறுங்கியது. இதில் காரில் இருந்த கேளம்பாக்கத்தைச் சேர்ந்த மகா ஸ்வேதா (21), பவித்ரா (21), திருச்சியைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் (23) ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். காரை ஓட்டி வந்த சென்னையைச் சேர்ந்த சிவா (23) மற்றும் மற்றொரு மாணவி அந்தமானைச் சேர்ந்த கர்லின் பால் (21) ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் மயங்கிக் கிடந்தனர்.
நான்கு மாணவர்கள் உயிரிழப்பு
விபத்து நடந்த சத்தம் கேட்டதும் அவ்வழியே சென்றவர்கள் தங்கள் வாகனங்களை ஓரமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கிச் சென்று உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இருவரையும் மீட்டு சென்னை அப்போலோ தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்தமானைச் சேர்ந்த கர்லின் பால் (21) என்ற மாணவியும் இறந்தார்.
இதனிடையே விபத்து குறித்து தகவலறிந்து வந்த கேளம்பாக்கம் போலீசார் கார் சுக்கு நூறாக நொறுங்கிக் கிடந்ததால் கடப்பாரை மற்றும் பல்வேறு சாதனங்களைக் கொண்டு காரை பிளந்து சடலமாக கிடந்த மூவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து அறிந்ததும் அவர்கள் படித்து வந்த கல்லூரி மாணவர்களும், மாணவிகளும் மற்ற கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் திரண்டு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
கதறி அழுத நண்பர்கள்
சக மாணவர்களின் உடல்களைக் கண்டு அனைவரும் தேம்பித் தேம்பி அழுதது அனைவரின் நெஞ்சத்தையும் உருக்குவதாக இருந்தது. இதைத் தொடர்ந்து இறந்து போனவர்களின் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு கதறி அழுதனர்.
நாய்க்குறுக்கே வந்ததா ?
இதனிடையே பள்ளிக்கரணை போக்குவரத்து இணை ஆணையர் சமய் சிங் மீனா, ஐ.ஜி. மகேஸ்வரி, கேளம்பாக்கம் உதவி ஆணையர் வெங்கடேசன் விபத்து நடந்த இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். காரை ஓட்டி வந்த மாணவர் மது அருந்தி இருந்தாரா என்று விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மேலும், காரை ஓட்டி வந்து பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவர் சிவா சென்னையைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் ஒருவரின் மகன் என்று கூறப்படுகிறது. நாய் குறுக்கே வந்ததால் இந்த விபத்து நடைபெற்றதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நாய் குறுக்கே வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.