Karnataka | பெண்ணை நிர்வாணப்படுத்தி குச்சியால் தாக்குதல்.. கெஞ்சியும் விடாத கொடூரர்கள்! வைரல் வீடியோவால் நடவடிக்கை
பெண்ணை நிர்வாணப்படுத்தி குச்சியால் தாக்கும் வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து அது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்
கர்நாடகாவின் யாத்கிர் மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இணையத்தில் பரவிய வீடியோவின்படி, 4 ஆண்கள் ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்தி குச்சியால் தாக்குகின்றனர். திடீரென வைரலாக பரவிய இந்த வீடியோவால் சோஷியல் மீடியாவே கொதித்தது. பெண்ணை தாக்கும் நபர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. வைரல் வீடியோவை ஆதாரமாகக் கொண்டு விசாரணை நடத்திய போலீசார், நிங்கராஜூ, ஐயப்பா, பீமாசங்கர், ஷரனு ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். ஐயப்பா என்பவர் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வருகிறார். பீமாசங்கர் பீடா கடையும், ஷரணு சாலையோர வியாபாரியாகவும் உள்ளார்.
நிங்கராஜூ, ஷகபுரா காவல்நிலையத்தில் உதவி ஓட்டுநராக இருந்துள்ளார். இந்த வீடியோ குறித்து விசாரணை நடத்தியதில் இது கடந்த வருடம் நடந்த சம்பவம் என தெரியவந்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள யாத்கிர் எஸ்பி வேதமூர்த்தி, ''இந்த சம்பவம் ஒரு வருடத்துக்கு முன்னதாக நடந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்னவென்றால், பேருந்து நிலையத்தில் காத்திருந்த பெண்ணை அழைத்துச் சென்று 4 பேரும் தாக்கியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலானதை அடுத்தே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சம்பவம் நடந்த போதே அப்பெண் போலீசாரிடம் புகாரளிக்கவில்லை என்பதால் ஒரு வருடகாலமாக குற்றவாளிகள் வெளியில் சுதந்திரமாக சுற்றியுள்ளனர். என்றார்.
அந்த இரண்டு நிமிட வீடியோவில், 4 பேர் அப்பெண்ணை நிர்வாணப்படுத்தி குச்சியால் தாக்குகின்றனர். வலியால் துடிக்கும் பெண் தன்னை விட்டுவிடும்படி கெஞ்சுகிறார். ஆனால் உன்னை கொன்றாலோ, எரித்தாலோ யாருக்கும் தெரியாது என அவர்கள் பெண்ணை மிரட்டுகின்றனர். இது குறித்து தெரிவித்துள்ள போலீசார், இது பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம் எனத் தெரிகிறது. பெண்ணை நிர்வாணப்படுத்தி தாக்கியது ஏன் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இது திருட்டு புகாரில் பெண்ணிடம் நடத்தப்பட்ட கொடூர விசாரணையாக இருக்கலாம் என யூகிக்கிறோம். அந்த வீடியோவில் பணம் கொடுக்கல், வாங்கல் குறித்தும் குரல் வருகிறது எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து பேசிய மூத்த காவல் அதிகாரி ஒருவர், அப்பெண் ஒரு புகார் ஒன்றை காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார். பின்னர் குற்றவாளிகளிடமே ரூ.13 ஆயிரம் பெற்றுக்கொண்டு அந்தப்புகாரை அவர் வாபஸ் வாங்கியுள்ளார். பின்னர் அப்பெண்ணை அணுகிய 4 பேர் காவல் நிலையத்தில் கொடுத்த பணத்துடன் ரூ.1000 சேர்த்து ரூ.14 ஆயிரம் தர வேண்டுமென அவரை தாக்கியுள்ளனர். அதன் பின்பு அவர் காவல் நிலையத்தை அணுகவில்லை என்றார்.