Rajesh Doss : "நெஞ்சு வலிக்குது" நீதிமன்றத்தில் கதறிய முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் - பெரும் பரபரப்பு
Rajesh Doss: பீலா வெங்கடேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ராஜேஷ் தாஸ் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டார்.
தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ் தாஸ் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் எஸ்பியிடம் முன்னாள் சிறப்பு டிஜிபி காரில் அழைத்து கொண்டு சென்றபோது பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 20 ஆயிரத்து 500 ருபாய் அபராதமும், பெண் எஸ்.பியை தடுத்து நிறுத்திய செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி கண்ணனுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. உயர்நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என அவர் தனது மனுவில் கோரி இருந்தார். ராஜேஷ் தாஸை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்தநிலையில் ராஜேஷ் தாசின் மனைவி பீலா வெங்கடேசன், ராஜேஷ் தாஸிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். விவாகரத்து தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் பீலா திடீரென ராஜேஷ் தாஸ்மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் கேளம்பாக்கம் போலீசார் ராஜேஷ் தாஸ் மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
காவலாளியை மிரட்டி
இந்தநிலையில், கேளம்பாக்கம் அடுத்த தையூர் பகுதியில் உள்ள பீலா ராஜேஷுக்கு சொந்தமான வீட்டில் ராஜேஷ் தாஸ் 10 பேருடன் அத்துமீறி நுழைந்து வீட்டின் பூட்டை உடைத்ததாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜேஷ் தாஸ் சில மர்ம நபர்களுடன் சேர்ந்து பாதுகாவலரையும் மிரட்டி உள்ளார். மேலும் பாதுகாப்புக்கு இருந்த காவலாளியை மிரட்டி அங்கிருந்து அடித்து விரட்டி உள்ளார்.
மேலும் அவரிடம் இருந்து தொலைபேசியும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது, எனவே சம்பந்தப்பட்ட ராஜேஷ் தாஸ் மற்றும் இதர குற்றவாளிகள் மீது தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர் என்னையும் தாக்கலாம் என எனக்கு அச்சமாக உள்ளது என பீலா கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்குப்பதிவு
IPC . 143, 448,454,352,506(1) ஆகிய ஐந்து பிரிவினில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு அது தொடர்பான மேல்முறையீடு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மற்றொரு வழக்கில் ராஜேஷ் தாஸ் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவன்- மனைவி தொடர்பான விவகாரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், ராஜேஷ் தாஸ் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நெஞ்சு வலி
இந்தநிலையில் இன்று தையூர் பங்களாவில் இருந்த ராஜேஷ் தாசை கேளம்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரணையை துவக்கியுள்ளனர். பீலா வெங்கடேசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ராஜேஷ் தாஸ் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் திருப்போரூர் நீதிமன்றம் கொண்டு வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்ற பொழுது , திடீரென தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதால் நீதிமன்றம் பரபரப்புக்கு உள்ளானது.
தொடர்ந்து காவல் வாகனத்தில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு நீதிமன்றத்தில் நீதிபதி முன்னணியில் ஆஜர் படுத்தப்பட்டார். தொடர்ந்து தனக்கு உடல்நிலை சரியில்லை தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார் . காவல்துறை மற்றும் ராஜேஷ் தாஸ் தரப்பு வழக்கறிஞர்கள் வாதங்களைக் கேட்ட நீதிபதி , ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
மற்றொரு வழக்கு பதிவு
முன்னதாக காவலர்கள் கைது செய்ய சென்ற பொழுது காவலர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு காவல் நிலையத்திலும் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணி செய்யாமல் தடுத்த புகாரின் அடிப்படையில், ராஜேஷ் தாஸ் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது