வங்கி விவரங்களை அள்ளிக்கொடுத்த மூதாட்டி.. வாயால் வடைசுட்டு ரூ.9 லட்சம் அபேஸ் செய்த ஹைடெக் திருடன்..!
ஆன்லைன் வங்கி மோசடி குறித்து முதல் 1 மணி நேரத்துக்குள் வங்கிக்கோ அல்லது சைபர் க்ரைம் பிரிவிக்கோ தகவல் கொடுத்தால் பண மீட்பு நடவடிக்கை மிகமிக எளிது என்கின்றனர் அதிகாரிகள்.
"உங்களின் வங்கி ஏடிஎம் எண், பாஸ்வேர்டு, ஓடிபி உள்ளிட்ட விவரங்களை வங்கி ஊழியர்கள் ஒருபோதும் கேட்கமாட்டார்கள் போலி நபர்களிடம் ஏமாற வேண்டாம்..."
இந்த எச்சரிக்கை அறிவிப்பை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். ஆனாலும் எங்கோ ஒருசிலர் அவ்வப்போது ஏமாந்துவிடுகின்றனர். ஏமாறுபவர்கள் யார் என்பதை அடையாளம் காண்பதில் ஹைடெக் திருடர்களும் மேப் போட்டே வைத்திருக்கின்றனர்.
அப்படித்தான் புதுச்சேரியில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. புதுச்சேரி ரெயின்போ நகரைச் சேர்ந்தவர் வாசுதேவன், இவரது மனைவி கீதா. வாசுதேவன் ஓய்வுபெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர். இவருக்கும், கீதாவுக்கும் கரூரு வைஸ்யா வங்கியில் கூட்டுக் கணக்கு இருக்கிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கீதாவை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் தான் கரூர் வைஸ்யா வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறியுள்ளார். கீதாவிடம் வங்கிக் கணக்கின் விவரங்களைக் கேட்டுள்ளார். ஆனால், கீதாவோ யாரென தெரியாத நபரிடம் விவரங்களைச் சொல்லக்கூடாது என்று சற்று எச்சரிக்கையுடனேயே செயல்பட்டிருக்கிறார். மறுமுனையில் பேசிய நபரோ விடாக்கண்டன்போல் அடுத்தடுத்து 3 முறை ஃபோன் செய்துள்ளார். அவர் பேசிய தொணியிலிருந்து அந்த நபர் வங்கி உயர் அதிகாரி தான் என்று கீதாவும் நம்பிவிட்டார்.
முதலில் கீதா வாசுதேவன் தம்பதியினரின் வங்கிக் கணக்கை அவர் கேட்டுள்ளார். பின்னர் நெட்பேங்கிக் ஆக்டிவேட் செய்யும் நோக்கத்தில் அவர்களின் கஸ்டமர் ஐடி, ஏடிம் எண், பின்னால் இருக்கும் சிவிவி, கடைசியாக மொபைல் எண்ணுக்கு வந்த ஓடிபி என அத்தனையையும் அந்த ஹைடெக் திருடன் கேட்க சற்றும் சளைக்காமல் அள்ளிக் கொடுத்திருக்கிறார் கீதா. அப்புறம் என்ன நெட் பேங்கிங்கை ஆக்டிவேட் செய்துவிட்டு ஒரே மூச்சாக ரூ.20 லட்சம் அபேஸ் செய்தார் அந்த நபர். வெளியில் சென்ற வாசுதேவன் வீடு திரும்பியபோது கீதா நடந்தவற்றை சொல்ல பதறிப்போய் பக்கத்திலிருக்கும் ஏடிஎம் சென்று பார்த்துள்ளார் வாசுதேவன். மொத்தமாக ரூ.20 லட்சம் திருடப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். சில நிமிட பதற்றத்துக்குப் பின்னர், கரூர் வைஸ்யா வங்கியில் உள்ள தனது உறவினரின் உதவியை நாடினார். அவர் அந்த வங்கியின் உயரதிகாரி என்பதால் உடனே செயல்பட்டு ரூ.11 லட்சம் வரை மீட்டுத்தந்துள்ளார். ஆனால், ரூ.9 லட்சம் போன இடம் தெரியவில்லை. அப்புறம் என்ன சைபர் க்ரைம் போலீஸார் உதவியை நாடிச் சென்றனர்.
சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் ஹைடெக் திருடனை தேடி வருகின்றனர். பொதுவாகவே இதுபோன்ற ஹைடெக் திருடன்களின் டார்கெட் வயதானவர்கள், தனியாக வசிக்கும் பெண்களாகவே இருக்கின்றனர் என்கின்றனர் சைபர் க்ரைம் போலீஸார். ஆன்லைன் வங்கி மோசடி குறித்து முதல் 1 மணி நேரத்துக்குள் வங்கிக்கோ அல்லது சைபர் க்ரைம் பிரிவிக்கோ தகவல் கொடுத்தால் பண மீட்பு நடவடிக்கை மிகமிக எளிது என்கின்றனர் அதிகாரிகள்.