(Source: ECI/ABP News/ABP Majha)
பேரக் குழந்தையை கம்யூ., தலைவர் விற்ற விவகாரத்தில் முக்கிய ஆதாரம் வெளியானது!
கேரளா குழந்தை கடத்தல் வழக்கில் புதிய ஆதாரம் கிடைத்துள்ளது வழக்கில் முக்கியமானதாக அமைந்துள்ளது.
கேரளா மாநிலத்தை கடந்த ஓராண்டாக ஒரு குழந்தை கடத்தல் சம்பவம் உலுக்கி வந்தது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அனுபமா-அஜித் தம்பதிக்கு கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை அனுபமாவின் குடும்பத்தினர் அவருடைய விருப்பம் இல்லாமல் குழந்தையை விற்றதாக கூறப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக நீண்ட நாட்களாக அவர் சட்டப் போராட்டத்தை நடத்தி வந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக அனுபமா மற்றும் அஜித் ஆகியோரின் மரபணுக்கள் கடத்தப்பட்ட குழந்தையுடன் ஒத்துபோகியுள்ளது. இதன்மூலம் கடத்தப்பட்டது அனுபமாவின் குழந்தை என்பது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. இதுகுறித்து அனுபமா,”இந்த முடிவு எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. என்னுடைய குழந்தையை விரைவாக நான் திரும்பி பெறுவேன் என்று நம்புகிறேன். என்னுடைய கோரிக்கைகளை அனைத்தும் நிறைவேறும் வரை என்னுடைய சட்டப் போராட்டம் தொடரும். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் நிச்சயமாக விசாரிக்கப்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக அனுபமா கடந்த சில நாட்களுக்கு முன்பாக கேரளா குழந்தைகள் நல ஆணையத்திற்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவருடைய தந்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் என்பதால் இந்த வழக்கில் அவருக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்திருந்தார். மேலும் நீதிமன்றத்தில் அவருடைய குழந்தை ஆந்திராவிற்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்டது என்று வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் நீதிமன்றமும் அந்த குழந்தையை தத்தெடுத்ததை தடை செய்திருந்தது.
இருப்பினும் அவருடைய குழந்தையை ஆந்திராவிலிருந்து கேரளா அழைத்து வர அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் தனக்கு நீதி கிடைக்கும் வரை போராட போவதாக அறிவித்து அனுபமா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதன்பின்னர் தான் அவருடைய குழந்தை ஆந்திராவிலிருந்து கேரளா கொண்டு வரப்பட்டது. அத்துடன் அனுபமாவின் பெற்றோர், சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் உள்ளிட்ட 6 பேர் மீது சட்டவிரோதமாக குழந்தையை கடத்தி விற்றல் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அந்த குழந்தைக்கும் அனுபமா-அஜித் ஜோடிக்கும் நேற்று மரபணு பரிசோதனை செய்யப்பட்டது. அந்த மரபணு பரிசோதனையின் முடிவு தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தனது சொந்த குழந்தையை இழந்து ஒராண்டாக பறி தவிக்கும் பெண்ணிற்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக அமைந்துள்ளது.
மேலும் படிக்க: ரயில் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகலையா... அப்போ இனிமே இதை ஃபாலோ பண்ணுங்க!