தர்மபுரி அருகே பரபரப்பு... இளம் பெண் மர்ம மரணம் .. சடலத்தை காண்பித்த வாலிபர் தப்பி ஓட்டம்
உடல் கிடந்த இடத்தை அடையாளம் காண்பித்த வாலிபர் தலைமறைவாகிவிட்டார். அவரை தேடி வருகிறோம். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
தர்மபுரி அருகே இளம் பெண் காயத்துடன் தூக்கில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் சடலத்தை காண்பித்த வாலிபர் போலீஸ் பிடியிலிருந்து தப்பினார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே புலிக்கரை சென்னியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ் ( 31 )பொக்லைன் வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கும் பாலக்கோடு மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் மகள் ஆனந்தி (25) என்பவருக்கும் கடந்த எட்டு ஆண்டுளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஐந்து மற்றும் மூன்று வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர் செல்லும் கனகராஜ் சில நேரங்களில் அங்கேயே தங்கி விடுவது வழக்கம்.
இந்நிலையில் ஆடிப்பெருக்கு விழாவிற்கு அழைப்பதற்காக நேற்று முன்தினம் பழனிவேல் தனது மகள் ஆனந்தியை செல்போனில் அழைத்துள்ளார். ஆனால் பலமுறை அழைத்தும் செல்போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த அவர் உறவினர்கள் இரண்டு பேருடன் சென்னியம்பட்டிக்கு விரைந்தார். ஆனால் அங்கு ஆனந்தி இல்லை குழந்தைகள் இருவரும் வயதான மாமியாரிடம் இருந்தனர்.
ஆனந்தி குறித்து அவரிடம் கேட்டபோது, பக்கத்து வீட்டைச் சார்ந்த அபினேஷ் (23) என்பவர் அழைத்துச் சென்றதாக தெரிவித்தார். இதனால் சந்தேகமடைந்த பழனிவேல் மதிக்கோன் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் காவல்துறையினர் விரைந்து சென்று வீட்டின் அருகே உள்ளவரை விசாரித்தனர். அப்போது அபினேஷ் என்ற இளைஞன் ஆனந்தியை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
உடனே காவல்துறையினர் அபினேஷை பிடித்து விசாரித்தனர். அவர் அங்கிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள தோட்டத்திற்கு காவல்துறையினரை அழைத்துச் சென்றார். அங்குள்ள நாவல் மரத்தில் ஆனந்தி தூக்கில் சடலமாக தோன்றிய நிலையில் இருந்தார்.
அவரது உடலில் காயங்கள் இருந்தன. இதை அடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பரபரப்பிற்கிடையே போலீசாரின் பிடியிலிருந்து அபினேஷ் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது கடந்த இரண்டாம் தேதி மாலை ஆனந்தியின் வீட்டிற்கு சென்ற அபினேஷ் தனது தோழிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறி அவரை உதவிக்கு அழைத்துச் சென்றது தெரியவந்தது. அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்து உள்ளது. மேலும் அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ஆனந்தியின் சாவில் தந்தை பழனிவேல் மற்றும் உறவினர்கள் ஆனந்தியை கொலை செய்து உடலை மரத்தில் தொங்க விட்டிருக்கலாம். அதனால் கொலை செய்தவனை கைது செய்யும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் எனக் கூறி தர்மபுரி அரசு மருத்துவமனை முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.
அறிக்கை வந்ததும் அதனை அடிப்படையில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியாக கூறினார். அதன் பேரில் சடலத்தைப் பெற்றுக் கொண்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில்:-
உடலில் காயங்களுடன் ஆனந்தி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உடல் கிடந்த இடத்தை அடையாளம் காண்பித்த வாலிபர் தலைமறைவாகிவிட்டார். அவரை தேடி வருகிறோம். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.