(Source: ECI/ABP News/ABP Majha)
Crime: வேலூரில் பட்டா கத்தியுடன் நடுரோட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம் - 2 இளைஞர்கள் கைது
வேலூரில் பூ மாலை, பட்டாசு, பட்டா கத்தியுடன் நடுரோட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி பிறந்த கொண்டாடிய இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர் ( Vellore News): வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த ஓடை பிள்ளையார் கோவில் அருகே ஒரு உணவகம் உள்ளது. அந்த உணவகத்தின் எதிரே வேலூரில் இருந்து காட்பாடி சித்தூர் செல்லும் சாலையில் கடந்த 11-ந் தேதி மூன்று இளைஞர்கள் இருச்சக்கர வாகனம் நிறுத்திவிட்டு 12 மணிக்கு ஓட்டலில் பணிபுரியும் பரமக்குடியைச் சேர்ந்த பூவரசன் வயது (25) என்பவரின் பிறந்தநாளை கொண்டாட அவரது நண்பர் காட்பாடியை அடுத்த எல்.ஜி.புதூர் பகுதியைச் சேர்ந்த சிவா வயது (21) ஏற்பாடு செய்திருந்தார்.
இளைஞர்கள் பட்டாக்கத்தியில் கேக் வெட்டி கொண்டாட்டம்
அப்போது இருச்சக்கர வாகனத்தின் மீது பிறந்தநாள் கேக்கை வைத்து அதை பட்டாகத்தியை கொண்டு பூவரசன் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். அதோடு இல்லாமல் பிறந்த நாள் கொண்டாடியதாக பூவரசன் என்ற இளைஞருக்கு ஆள் உயர பூ மாலை அணிவித்தும், சரவெடிகளை கொளுத்தி நடுரோட்டில் வீசி பந்தா காட்டியுள்ளனர். மிகவும் பரபரப்பான சாலையில் நள்ளிரவில் சாலையோரம் கையில் பட்டாசு மற்றும் பட்டா கத்தியுடன் நின்று கேக் வெட்டிய இளைஞர்கள் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இவர்களின் பிறந்தநாளை பட்டா கத்தியுடன் கேக் வெட்டுவதை பந்தாவிற்காக சக நண்பர் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதோடு அந்நேரத்தில் அவ்வழியாக பயணித்த வாகன ஓட்டிகள் மத்தியில் மிகுந்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் காட்பாடி காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
பட்டாக்கத்தியில் கேக் வெட்டிய 2 இளைஞர்கள் கைது
அதன்பேரில் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் தலமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தினார். அப்போது, பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ஓட்டலில் தேங்காய் வெட்டும் பட்டா கத்தியைக் கொண்டு சாலையோரத்தில் இருச்சக்கர வாகனத்தின் மீது கேக் வைத்து கத்தியால் கேக் வெட்டியும், பட்டாசுகளை வெடிக்கச்செய்து அதை சாலையில் வீசியதும் தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பூவரசன், சிவா ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் எச்சரித்துள்ளார். நடுரோட்டில் பட்டா கத்தியால் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் காட்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.