Crime: சினிமா பட பாணியில் கொள்ளையர்களை பிடித்த திருவண்ணாமலை போலீசார் - நடந்தது என்ன..?
கொள்ளையர்களை சினிமா பட பாணியில் துரத்தி தடுப்புகள் அமைத்து துணிச்சலுடன் திருவண்ணாமலை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள உறையூர் கிராமத்தில் கடந்த 23ஆம் தேதி இரவு சென்னை கொளத்தூரை சேர்ந்த யுவராஜ் வயது 32, பாலாஜி 24 ஆகிய இருவரும் வீட்டினை பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 19 சவரன் தங்க நகை , அந்த வீட்டின் முன்பக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரையும் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்னைக்கு சென்றுள்ளனர். இதுகுறித்து பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் சபியுல்லா தலைமையிலான காவல்துறையினர் 24-ஆம் தேதி சம்பவம் நடந்த வீட்டினை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தியதில், இருவரும் திருடிய காருடன் சென்னையில் இருப்பதாக தகவல் அறிந்து மூன்று தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அதனைத் தொடர்ந்து கடந்த 26-ஆம் தேதி தலைவாசல் பகுதியில் குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக துணை காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் வந்ததின் பேரில் மூன்று தனிப்படை போலீசார் நேற்று இரவு முதல் சினிமாவில் வருவது போன்று குற்றவாளிகளின் காரை பின் தொடர்ந்து வந்துள்ளனர். வரும் வழியில் தலைவாசல் மற்றும் உள்ளிட்ட இரண்டு டோல்கேட்டுகளை உடைத்துக் கொண்டு தப்பித்து தியாகதுருவம் வழியாக திருவண்ணாமலை மாவட்டம் மணலூர்பேட்டை, தச்சம்பட்டு வழியாக திருவண்ணாமலை கிரிவலப் பாதைக்கு வந்துள்ளனர். கொள்ளையர்கள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயனுக்கு கொடுத்த தகவல் அடிப்படையில் நகர துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன், முருகன் ஆகியோர் நேற்று காலை 8:30 மணி அளவில் பண்ருட்டி போலீசார் கொடுத்த தகவலின் பெயரில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை புறவழிச் சாலை வழியாக செங்கம் செல்லும் சாலை சந்திப்பு பகுதியில் திருவண்ணாமலை போலீசார் சினிமா பட பாணியில் தடுப்புகள் அமைத்து லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களை வழியில் குறுக்கே நிறுத்தி துணிச்சலாக செயல்பட்டு காரை மடக்கி பிடித்துள்ளனர். காருக்குள் இருந்தவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் போலீசார் காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே சென்று கொள்ளையர்களை கைது செய்தனர். இருவரையும் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி பின்னர் பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் சபியுல்லா தலைமையிலான தனிப்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் திருவண்ணாமலையில் இரண்டு கொள்ளையர்களை மடக்கி பிடிக்க உறுதுணையாகவும் பல்வேறு வகையில் செயல்பட்ட காவல்துறையினரை திருவண்ணாமலை நகர காவல் நிலையத்திற்கு அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் பாராட்டு தெரிவித்ததுடன் அனைவருக்கும் வெகுமதி வழங்கி கௌரவித்தார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/