Crime: தம்பி கொலை .. பழிக்கு பழியாக திட்டமிட்டு கொன்ற அண்ணன் கைது - நெல்லையில் பயங்கரம்
கல்லறை தோட்டம் அருகே மதுகுடித்துக் கொண்டு இருந்த போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் முத்துஹரியின் கொலைக்கு பழிக்குப்பழியாக அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள துதியின் கோட்டை தேவாலயத்தின் பின்புறம் இருக்கும் கல்லறை தோட்டத்தில் இருக்கும் கட்டிடம் ஒன்றில் வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் இருப்பதாக கடந்த செவ்வாய்க் கிழமை மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது வாலிபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் கொலையான வாலிபர் யார் என்பது தொடர்பாகவும் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் உயிரிழந்த வாலிபர் நெல்லை கேடிசி நகர் பகுதியைச் சேர்ந்த ஜோஸ் செல்வராஜ் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துரிதப்படுத்தி வந்தனர். குறிப்பாக பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த முத்துஹரி என்பவரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக இவர் இருப்பதும் தெரியவந்தது. இந்த நிலையில் இந்த கொலை குறித்து பரபரப்பு தகவல்களும் வெளியாகியுள்ளது. ஜோஸ்செல்வராஜின் நண்பர் முத்துஹரி. இருவரும் நல்ல நண்பர்களாக இருந்த நிலையில் கடந்த ஆண்டு பாளையங்கோட்டை சாந்தி நகரில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு ஜோஸ்செல்வராஜ் மது குடிப்பதற்காக அழைத்து சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் முத்துஹரியை ஜோஸ்செல்வராஜ் உட்பட 6 பேர் வீட்டு மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜோஸ்செல்வராஜ் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்த நிலையில் தான் கடந்த செவ்வாய்க் கிழமை இந்த கொலை தொடர்பாக நெல்லை நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்துள்ளார்.
பின் ஜோஸ் உட்பட கொலை வழக்கில் தொடர்புடைய நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் கல்லறை தோட்டத்தில் மது அருந்த வந்த நிலையில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு உயிரிழந்த முத்துஹரியின் அண்ணன் சந்தோஷ்குமார், அவரது நண்பர்கள் செல்வகுமார், பாலு, பாலசுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள் ஜோஸ்செல்வராஜிடம் பேச்சுக்கொடுத்து மதுகுடிக்க அழைத்து சென்றுள்ளனர். பின் கல்லறை தோட்டம் அருகே மதுகுடித்துக் கொண்டு இருந்த போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் முத்துஹரியின் கொலைக்கு பழிக்குப்பழியாக அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதில் இரத்த வெள்ளத்தில் சரிந்த ஜோஸ் செல்வராஜ் துடிதுடித்து இறந்ததாக தெரிய வந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக மேலப்பாளையம் போலீசார் சந்தோஷ்குமார், செல்வகுமார், பாலு, பாலசுப்பிரமணியன் ஆகிய 4 பேரை கைது செய்ததுடன் இதில் தொடர்புடைய மேலும் 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்