Crime: திருமணத்திற்கு ’நோ’ சொன்ன பெண்; நடுரோட்டில் கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞர் - மும்பையில் ஷாக்
மும்பையில் திருமணம் செய்ய மறுத்த 18 வயதுடைய இளம்பெண், கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime: மும்பையில் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த 18 வயதுடைய இளம்பெண், கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்:
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும், குறிப்பாக வடமாநிலங்களில் நினைத்துக் கூட பார்க்காத அளவுக்கு குற்றங்கள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட, நடுரோட்டில் 16 வயது சிறுமியை, இளைஞர் ஒருவர் 21 முறை கத்தியால் குத்திக் கொலை செய்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து தற்போது மும்பையிலும் பெண்களுக்கு திரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தற்போது ஒரு சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது.
திருமணத்திற்கு மறுத்த பெண்:
மும்பை அருகில் உள்ள பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அர்ச்சனா(18). இவர் கபல்பாடா என்ற பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தவர். இவர் விடுதியில் தங்கிக் கொண்டு, அருகில் உள்ள கல்லூரிக்கு சென்று படித்து வந்தார். இவரை கடந்த சில நாட்களாக பிரபாகர் (22) என்ற இளைஞர், அர்ச்சனாவை பின் தொடர்ந்து வந்திருக்கிறார். பின்னர், அந்த பெண்ணை காதலிப்பதாக தெரிவித்து, தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
அந்தப்பெண் தான் படிக்க வேண்டும் என்று கூறி வந்துள்ளார். ஆனாலும், இளைஞர் பிரபாகர், இளம்பெண் அர்ச்சனாவுக்கு தன்னை காதலிக்க வேண்டும் என்று தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில், இளம்பெண் சம்மதம் தெரிவிக்காததால், அர்ச்சனாவின் வீட்டிற்கு சென்று அவரை திருமணம் செய்து கொள்ள பெண் கேட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், பெண்ணின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவில்லை.
நடுரோட்டில் கொல்லப்பட்ட கொடூரம்:
இதனால், கடும் கோபத்தில் இளைஞர் பிரபாகர் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல், இளம்பெண் அர்ச்சனா தனது தோழியுடன் கல்லூரிக்கு சென்றார். இதனை பார்த்த இளைஞர் பிரபாகர், கல்லூரி முடியும் வரை அதே இடத்திலேயே காத்திருந்ததாக தெரிகிறது. பின்னர், கல்லூரியில் இருந்து தனது தோழியுடன் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார் அர்ச்சனா.
அப்போது, இவரை வழிமறித்து இளைஞர் பிரபாகர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்ப்ட்டிருக்கிறது. இதனை அடுத்து, அந்த இளைஞர், அர்ச்சனாவை கையில் வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
பரிதாப மரணம்:
அர்ச்சனாவை கொலை செய்துவிட்டு பிரபாகர் அங்கிருந்து காட்டிற்குள் சென்று பதுங்கிக் கொண்டார். பின்னர், ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை, அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரபாகரனை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காலையில் மொகாடாவில் உள்ள ஏரியில் பிரபாகர் சடலமாக கிடந்துள்ளார். அவர் அங்கிருந்த குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.