Crime: தஞ்சையை உலுக்கிய ஆணவக்கொலை.. பெற்ற மகளையே எரித்துக்கொன்ற கொடூரம்..
தஞ்சை மாவட்டத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட பெண் ஆணவக்கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime: தஞ்சை மாவட்டத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட பெண் ஆணவக்கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன் (19). அதே பகுதியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா (19). இவர்கள் இருவரும் திருப்பூரில் வேலை பார்த்து வந்தனர். அப்போது, இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், நாளடைவில் காதலாக மாறியது.
இவர்களது காதலை அவர்களின் வீட்டாரிடம் கூறியுள்ளனர். ஆனால், அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இரண்டு பேருமே வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரின் வீட்டிலும் ஒப்புக்கொள்ளவில்லை. இந்த காதல் விவகாரம் வீட்டில் தெரிந்த நிலையில், அந்த பெண் வீட்டில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர்.
இதனால், திருப்பூரில் வேலை பார்த்து வந்த பெண்ணையும் வீட்டிற்கு வர கூறியுள்ளனர். அந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்ப்பது தெரிந்ததும், நவீனிடம் இதுபற்றி கூறியிருக்கிறார். பிரச்சனை தீவிரமான நிலையில், இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அவர்கள் இருவர்களின் வீட்டிற்கு தெரியாமலே கடந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.
கொலை செய்யப்பட்ட பெண்:
திருமணம் செய்தது பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து, பெண் ஐஸ்வர்யாவின் குடும்பத்தினர் அவரை தஞ்சாவூருக்கு அழைத்து வந்திருக்கின்றனர். இதுதொடர்பாக ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, கடந்த 2ஆம் தேதி காவல்நிலையத்தில் ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்தி அவரது தந்தை உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர், கடந்த 3ஆம் தேதி நவீனை தொடர்புகொண்ட அரவது நண்பர்கள், "ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் அடித்து துன்புறுத்தி கொலை செய்து எரித்துவிட்டனர்" என்று கூறியுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த நவீன், காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், கடந்த 8-ஆம் தேதி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ஐஸ்வர்யாக மர்மமான முறையில் இறந்துள்ளது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்து ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள், அவரது மனைவி ரோஜா, ஐஸ்வர்யாவின் பெரியம்மா பாசமலர், அவரது சகோதரி விளம்பரசி, மற்றொரு சகோதரி இந்து ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
இந்த விசாரணையில் ஐஸ்வர்யா கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனை தொடர்ந்து, ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள், அவரது மனைவி ரோஜா இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதல் திருமணம் செய்ததால் தனது மகளை பெற்றோரை கொன்றது விசாரணையில் தெரியவந்தது.