(Source: ECI/ABP News/ABP Majha)
போதைப் பொருள் வழக்கு: தீபிகா படுகோனேவின் மேலாளருக்கு ஜாமீன் மறுப்பு!
போதைப் பொருள் தொடர்பாக தொலைபேசியில் சேட் செய்தது தொடர்பான வழக்கில் தீபிகா படுகோனேவின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் தொடர்பாக தொலைபேசியில் சேட் செய்தது தொடர்பான வழக்கில் தீபிகா படுகோனேவின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகராக இருந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் மர்மமான முறையில் இறந்தார். அவரது மரணம் பல்வேறு மர்ம முடிச்சுகளையும் முன்னே கொண்டுவந்தது.
பாலிவுட் திரையுலகில் போதைப் பொருள் புழக்கம் சர்வ சாதாரணமாக நடைபெறுவது அம்பலமானது.
இதனால் இந்த வழக்கு, போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கையில் வந்தது. சுஷாந்த மர்ம மரணம் விசாரணை ஒருபுறம் நடக்க, பாலிவுட்டில் போதைப் பொருள் புழக்கம் விசாரணை இன்னொருபுறம் நடந்து கொண்டிருக்கிறது.
மேலாளர்களுக்குள் நடந்த பேச்சு..
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மேலாளர் ஜெயா சாஹாவும், தீபிகா படுகோனின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷும் கடந்த 2017 ஆம் ஆண்டு போதைப்பொருள் குறித்து சேட் செய்துள்ளனர். இது குறித்து தீபிகா படுகோனேவிடமும், கரிஷ்மாவிடமும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையைத் தொடர்ந்து மும்பை வெர்சோவா பகுதியில் இருக்கும் கரிஷ்மா பிரகாஷின் வீட்டில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தீடீர் ரெய்டு நடத்தினர். அப்போது அந்த வீட்டிலிருந்து கேனபிஸ் ஆயில் எனப்படும் கஞ்சா எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. 2 புட்டிகளில் இருந்த எண்ணெய்யை பறிமுதல் செய்தனர். சோதனையின்போது அங்கு கரிஷ்மா இல்லாததால் அவருக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. முன்னதாக இந்த வழக்கில் கதை செய்யப்பட்ட போதை மருந்து விற்கும் ஒருவருக்கும் கரிஷ்மாவுடன் பரிச்சயம் இருப்பது தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.
பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத கரிஷ்மா பிரகாஷுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், கரிஷ்மா முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். கடந்த 2020 அக்டோபரில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் Narcotic Drugs and Psychotropic Substances Act (NDPS) இந்த மனு தாக்கலானது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சிறப்பு நீதிபதி வி.வி.வித்வான்ஸ் கரிஷ்மா பிரகாஷின் முன் ஜாமீன் மனுவை நிராகரித்தார். ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டிருந்தால் அந்த உத்தரவுக்கு இடைக்கால தடை வழங்கியது நீதிமன்றம். இதனால், தீபிகா படுகோனேவின் மேலாளர் மும்பை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோர வாய்ப்புள்ளது.
பாலிவுட் போதைப் பொருள் சர்ச்சை தொடர்பாக இதுவரை 20 பேர் கைதாகியுள்ளனர். மேலும், பிரபல நடிகர் அர்ஜூன் ராம்பாலிடமும் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், கடந்த செப்டம்பர் மாதம் பிரபல நடிகைகள் தீபிகா படுகோனே, ரகுல் பிரீத்சிங், சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர்.