அரை மணி நேர கேப்.. ஒரே கும்பல்.. அடுத்தடுத்து இரண்டு கொலை.! செங்கல்பட்டை அதிர வைத்த சம்பவம்!
செங்கல்பட்டு நகர் பகுதியில் மூன்று வருடங்களுக்கு பிறகு ரவுடிகள் அட்டகாசம் துவங்கி உள்ளதால் பொதுமக்கள் அச்சம்

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே செங்கல்பட்டு நகர காவல்நிலையம் உள்ளது. வழக்கு ஒன்றில் கையெழுத்து போட்டுவிட்டு, செங்கல்பட்டு கே.தெரு பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற அப்பு கார்த்திக் டீ குடிக்க வந்துள்ளார். அப்போது ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல் கார்த்திக் மீது நாட்டு வெடிகுண்டு வீசியும் கத்தியால் சரமாரியாக வெட்டியும் உரு தெரியாமல் தலையை சிதைத்துவிட்டு தப்பியோடி விட்டனர் .சம்பவ இடத்திலேயே அப்பு கார்த்தி துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
தப்பியோடிய மர்ம கும்பல் செங்கல்பட்டு மார்க்கெட் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வரும் செங்கல்பட்டு மேட்டுத்தெரு பகுதியில் வசித்து வரும் சீனுவாசன் என்பவரது மகன் மகேஷ் ( 22) என்பவர் டிவி பார்த்து கொண்டிருந்த போதே அதே கும்பல் மகேஷை சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பியோடினர். இருவரது உடலையும் மீட்ட செங்கல்பட்டு நகர போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து வழக்கு பதிவு செய்து தப்பியோடிய கும்பல் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே சமயத்தில் இரட்டை கொலை நடந்த சம்பவத்தால் செங்கல்பட்டு நகரமே பரபரப்பாக காணப்படுகிறது. காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் அப்பு கார்த்தி மற்றும் மகேஷ் ஆகிய இருவரும் பங்காளி வழியில் அண்ணன் தம்பிகள் என தெரியவந்துள்ளது. அப்பு கார்த்தி மீது ஏற்கனவே மூன்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. வழக்கிற்காக காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு விட்டு திரும்பும்போது வெட்டி சாய்த்து இருப்பதால், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம கும்பல் குறித்து தகவல் கிடைத்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயன்படுத்திய நாட்டு வெடிகுண்டுகளை வல்லுநர்கள் உதவியுடன் அப்புறப்படுத்தி, விசாரணை மேற்கொண்டார். தப்பியோடிய மூன்று நபர்களையும் கைது செய்ய தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
மக்கள் நடமாடும் பகுதியில் கொலை சம்பவம் நடந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

