Crime : சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வங்கியில் கொள்ளை; சிசிடிவியால் சிக்கிய வாலிபர்
சொகுசு வாழ்க்கை வாழ எண்ணி அன்னூர் தனியார் வங்கி கிளையில் நள்ளிரவில் புகுந்து லாக்கரில் இருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்த வாலிபரை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை அருகே சொகுசு வாழ்க்கை வாழ எண்ணி அன்னூர் தனியார் வங்கி கிளையில் நள்ளிரவில் புகுந்து லாக்கரில் இருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்த வாலிபரை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் ஐடிஎப்சி என்ற தனியார் வங்கியின் கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கடந்த ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி நள்ளிரவில் பூட்டு உடைக்கப்பட்டு, சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் நகை லாக்கரிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டதாக அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வங்கியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முகத்தை மறைத்தவாறு, வங்கியில் நுழைந்து லாக்கரில் இருந்து சாவகாசமாக பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த அன்னூர் காவல் துறையினர், வங்கியின் பழைய சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் அடிக்கடி வங்கிக்கு வரும் வாலிபர் ஒருவர் சந்தேகப்படும் வகையில் வங்கியை நோட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த மனோஜ் என்பதும், அன்னூர் அடுத்த குன்னத்துராம்பாளையத்தில் தங்கி பெயிண்டர் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மனோஜை பிடிக்க தனிப்படை அமைத்து காவல் துறையினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அன்னூர் அருகே மனோஜை காவல் துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். இதனை அடுத்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது, சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வங்கியில் கொள்ளை பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்ததும், அந்த பணத்தில் கோவையில் இருந்து விமானம் மூலம், மும்பை, டெல்லி மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு பயணித்து, அங்கு உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மனோஜ் கைது செய்த காவல் துறையினர், அன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சொகுசு வாழ்க்கைக்காக வாலிபர் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்