சென்னை விமான நிலையத்தில் கடத்தப்பட்ட சிவலிங்கம்.. வெளியான அதிர்ச்சி பின்னணி..
சென்னையில் கடத்தப்பட்ட சிவலிங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டது
சென்னை விமான நிலைய சரக்கு முனையத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்பவிருந்த பார்சல்களை வழக்கம்போல் சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அமெரிக்காவுக்கு அனுப்பவிருந்த ஒரு பார்சலை ஆய்வு செய்ததில் அதில் நாக பரணத்துடன் கூடிய பித்தளையால் ஆன சிவலிங்க சிலை இருந்தது தெரியவந்தது. சிலை யார் அனுப்பியது என்பது குறித்து விசாரித்தனர்.
சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணையில், கும்பகோணத்தில் உள்ள கலை கைவினை பொருள் விற்பனை மையத்தில் வாங்கப்பட்டதாக பார்சலின் மேலே குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், சிவலிங்கம் பழமையானது அல்ல என்பதற்கான தொல்லியல்துறை சான்றை இணைக்காமல் இருந்ததால் சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகமடைந்தனர். உடனே அதுகுறித்து இந்தியத் தொல்லியல் துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். விசாரணையில் கடத்தப்பட இருந்த சிவலிங்க சிலை கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே உள்ள கெடிலம் என்ற இடத்திலிருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
தொடர்ந்து சிலையை வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதுபோன்ற இந்தியா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பொக்கிஷங்கள் மற்றும் அரிய பொருட்கள் இவ்வாறு வெளிநாட்டுக்கு கடத்தப்படும் சம்பவம் தொடர்கதையாகி உள்ளது. இதற்கு நிரந்தரமாக முடிவுகட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் கப்பல் வழியாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது விமான நிலையங்களிலும் அதிக அளவு நடைபெறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டபொழுது, எப்பொழுதும் சென்னை விமான நிலையத்தில் வரும் அனைத்துப் பாகங்களும் முறையாக சோதனை செய்யப்படுவது வழக்கம். குறிப்பாக முறையற்ற விலாசம் மற்றும் சந்தேகத்திற்கு இடமாக இருக்கும் பார்சல்கள் பரிசோதனை செய்வது வழக்கம். அந்த வகையில் அவ்வாறு சந்தேகத்திற்குரிய பார்சலை பிரித்து சோதனை செய்ததில் பித்தளை சிவலிங்கம் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து இந்திய தொழில் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சிவலிங்கத்தின் வருடம் தோராயமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள், இந்த சிவ லிங்கம் சுமார் 1800 ஆண்டுகளில் சிவலிங்கம் வடித்து இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். தற்போது பார்சலை அனுப்பியவர்கள் யார் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
மேலும் படிக்க:ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் திரும்பி பார்க்க வைத்த அல்லூரி சீதாராமராஜூ - யார் இவர்?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்