சென்னையில் சினிமா பாணியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. வியாபாரியை கட்டிப் போட்டு வைரக்கல் திருட்டு
வடபழனி தனியார் ஓட்டலில் வைரக்கல் வியாபாரியிடம் பல லட்சம் மதிப்புள்ள வைரக் கல்லை திருடிச் சென்ற 4 நபர்கள் 12 மணி நேரத்தில் கைது.

வைரக் கல் பரிசோதனை
சென்னை அண்ணா நகர் 17வது தெருவில் வசித்து வருபவர் சந்திரசேகர் ( வயது 69 ) என்பவர் வைரக்கல் வியாபாரம் செய்து வருகிறார். சில நபர்கள் வைரக்கல் வாங்குவதற்காக அண்ணா நகரிலுள்ள சந்திரசேகரின் வீட்டிற்கு சென்று வைரக் கல்லை பரிசோதித்து பார்த்து விட்டு, விலையை பேசி வைரக் கல்லை வாங்கி கொள்வதாகவும் , நாங்கள் வடபழனியில் உள்ள ஓட்டலில் தங்கியிருக்கும் அறைக்கு வந்து பணத்தை பெற்றுக் கொண்டு, வைரக் கல்லை தருமாறும் கூறிச் சென்றனர்.
கயிற்றால் கட்டி போட்டு - வைரக்கல் பறிப்பு
சந்திரசேகர் வடபழனியிலுள்ள ஓட்டலுக்கு சென்று அங்குள்ள ஒரு அறையில் தங்கியிருந்த மேற்படி நபர்களிடம் வைரக் கல்லை காண்பித்தபோது , அந்த நபர்கள் சந்திரசேகரை அறையில் கயிற்றால் கட்டிப் போட்டு வைரக் கல்லை பறித்துக் கொண்டு காரில் தப்பிச் சென்றனர்.
கட்டப்பட்டிருந்த சந்திரசேகர் வெளியே வந்து , மேற்படி சம்பவம் குறித்து R-8 வடபழனி காவல் நிலைய குற்றப் பிரிவில் புகார் கொடுத்ததின் பேரில் , போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேற்கண்ட சம்பவம் தொடர்பாக , சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பேரில் , தி.நகர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் மேற் பார்வையில் , வடபழனி உதவி ஆணையாளர் மற்றும் R-B வடபழனி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு , காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்து , தனிப்படையினர் சென்னை மற்றும் அருகிலுள்ள எல்லையோர மாவட்ட போக்குவரத்து பகுதிகளில் தீவிர விசாரணை செய்தும் , சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும் , தப்பிச் சென்ற காரின் அடையாளம் மற்றும் பதிவு எண்ணை கொண்டு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் , தனிப்படையினர் அதிவேகமாக சென்ற THAR வகை காரை பின் தொடர்ந்து சென்று , தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினருடன் ஒருங்கிணைந்து , தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு சோதனை சாவடிக்கு அருகே மேற்படி காரை மடக்கிப் பிடித்து , காரில் இருந்த ஐயப்பன் தாங்கல் பகுதியை சேர்ந்த ஜான் லாயிட் ( வயது 34 ) , வளசரவாக்கம் காமாட்சி நகர் பகுதியை சேர்ந்த விஜய் ( வயது 24 ) , திருவேற்காடு பகுதியை சேர்ந்த ரதீஷ் ( வயது 28 ) , இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியை சேர்ந்த அருண் பாண்டியராஜன் ( வயது 32 ) ஆகிய 4 நபர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து புகார் தாரரின் பல லட்சம் மதிப்புள்ள வைரக்கல் மீட்கப்பட்டு, குற்றச் செயலுக்கு பயன்படுத்திய THAR வகை அதிவேக கார் பறிமுதல் செய்யப்பட்டது.
12 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்த போலீசார்
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விசாரணைக்குப் பின்னர் 4 எதிரிகளும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர். சம்பவம் நடந்து 12 மணி நேரத்தில் சிறப்பாக சென்னை பெருநகர காவல்துறையின் தி.நகர் துணை ஆணையாளர் தலைமையிலான தனிப்படையினர் துரித நடவடிக்கையுடன் அதிவேக காரினை பல்வேறு இடங்களில் பின் தொடர்ந்து அதிரடியாக குற்றவாளிகளை கைது செய்து , பல லட்சம் மதிப்புள்ள வைரக் கல்லை மீட்டுள்ளது அனைவராலும் பாராட்டப்பட்டது.
கத்தியைக் காட்டி மிரட்டி , இருசக்கர வாகனத்தை பறித்துச் சென்ற இளைஞர்
சென்னை புழல் அறிஞர் அண்ணா 3வது தெருவில் வசித்து வரும் விஜயகுமார், ( வயது 28 ) என்பவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். விஜயகுமார் அவரது டியோ இருசக்கர வாகனத்தில் வீட்டினருகே அறிஞர் அண்ணா 1வது தெரு வழியாக சென்று கொண்டிருந்த போது , அவ்வழியாக வந்த நபர் ஒருவர் விஜயகுமாரின் இருசக்கர வாகனத்தை வழிமறித்து , கத்தியைக் காட்டி மிரட்டி அவரது இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.
இது குறித்து M-3 புழல் காவல் நிலைய குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். M-3 புழல் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட மணி (எ) சஞ்சய் மணி ( வயது 21 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து புகார் தாரரின் டியோ இருசக்கர வாகனம் மீட்கப்பட்டு, குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் எதிரி மணி (எ) சஞ்சய் மணி M-3 புழல் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் , இவர் மீது 1 கொலை வழக்கு , போக்சோ , வழிப்பறி உட்பட சுமார் 7 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட மணி (எ) சஞ்சய் மணி, விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.





















