Crime : குழந்தையை தூக்கிச் சென்ற மனைவி...! பெற்றோருடன் தற்கொலை செய்து கொண்ட கணவன்..!
சென்னையில் சண்டை போட்டுக்கொண்டு குழந்தையை மனைவி தூக்கிச்சென்றதால் பெற்றோருடன் கணவன் தற்கொலைங செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ளது ஜானகிராமன் காலனி. இந்த பகுதியில் வசித்து வருபவர் கோபாலசாமி. இவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் கேண்டீன் நடத்தி வந்தார். இவரது மனைவி பானுமதி. இவர்களது மகன் கண்ணபிரான் கணினி சாப்ட்வேர் விற்பனையாளராக இருந்தார்.
தற்கொலை
இந்த நிலையில், நேற்று முன்தினம் கோபால்சாமியின் வீட்டை அக்கம்பக்கத்தினர் நீண்ட நேரம் தட்டியும் திறக்கவில்லை. இதனால், சந்தேகம் அடைந்து பார்த்தபோது வீட்டின் உள்ளே கோபால்சாமி, அவரது மனைவி பானுமதி, மகன் கண்ணபிரான் ஆகியோர் சடலமாக கிடந்துள்ளனர்.
இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 3 பேரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கோபால்சாமி வீட்டை போலீசார் சோதனை செய்தபோது அவர்களது தற்கொலை செய்து கொண்டதும், தற்கொலைக்கான காரணமும் தெரியவந்துள்ளது. கோபால்சாமி உயிரிழப்பதற்கு முன்பு தற்கொலை கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.
உருக்கமான கடிதம்
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது,
“ எங்கள் மகன் கண்ணபிரானுக்கு 5 வருடங்களுக்கு முன்பு பெங்களூரைச் சேர்ந்த வித்யா ( வயது 35) என்ற பெண்ணுடன் திருமணம் செய்து வைத்தோம். கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வித்யா குழந்தையை தூக்கிக்கொண்டு அவரது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். வித்யாவை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்தும் அவர் வர மறுத்துவிட்டார்.
எங்கள் பேரக்குழந்தையை பார்க்கவும், கொஞ்சவும் அனுமதிக்கவில்லை. இதனால், ஏற்பட்ட மன உளைச்சலும், மகனின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்ற மன அழுத்தமும் இருந்து வந்தது. இதனால், தற்கொலை செய்கிறோம். எங்களின் சொத்துக்களை ஆசிரமத்திற்கு எழுதி வைத்துள்ளோம். எங்கள் பேரனுக்கு 18 வயது பூர்த்தி அடைந்தபிறகு அந்த சொத்துக்களை எங்கள் பேரனிடம் சேர்த்து விடுங்கள்.”
இவ்வாறு அதில் எழுதப்பட்டுள்ளது.
போலீசாரின் விசாரணையில் கடந்த சில வாரங்களாகவே கோபால்சாமி, அவரது மனைவி பானுமதி மற்றும் அவர்களது மகன் கண்ணபிரான் மன உளைச்சலுடனே காணப்பட்டு வந்ததாக தெரியவந்துள்ளது.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.
மாநில உதவிமையம் : 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்