போக்சோ வழக்கில் 22 ஆண்டுகள் சிறை தண்டனை: செங்கல்பட்டு நீதிமன்றம் அதிரடி
22 ஆண்டுகள் மற்றும் ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்
காஞ்சிபுரம் மாவட்டம், சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய காஞ்சிபுரம் அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முஸ்தபா. இவருடைய மகன் முஜீபூர் ரகுமான் (24) என்பவர், கடந்த 14.10.2014 அன்று 09 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது சம்பந்தமாக அப்போதைய சிவகாஞ்சி காவல் நிலைய காவலர் பிரபாகர் வழக்கு பதிவு செய்து முஜிபுர் ரஹ்மானை கைது செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். பின்னர் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டு, வழக்கின் விசாரணை செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் உத்தரவின்பேரில், காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அஞ்சாலட்சுமி, செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் N.புவனேஷ்வரி, ஆகியோர் இவ்வழக்கில் தனிக்கவனம் செலுத்தினார்கள்.
இந்நிலையில் செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி R.K.P.தமிழரசி இந்த வழக்கில் முஜீபூர் ரகுமான் குற்றவாளி என உறுதிசெய்து 22 வருடம் ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 15,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு லட்சம் நிவாரணத் தொகை வழங்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டணை பெற்றுதர சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர், நீதிமன்ற விசாரணை பணிகளை மேற்கொண்ட காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற காவலரை காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.
போக்சோ (POCSO)
போக்சோ சட்டம் 2012 (POCSO - The Protection of Children from Sexual Offence) இயற்றுவதற்கு முன் இந்திய தண்டனை சட்டம் IPC) 354 (A)-இன் படி, ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் போது இச்சட்டத்தின் கீழ் பாலியல் குற்றவாளிக்கு ஒன்று முதல் மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து தண்டனையாக வழங்கப்படும். பாலியல் தாக்குதலுக்கு உட்படும் ஆண் குழந்தைகளுக்கு இச்சட்டம் பொருந்தாது. ஆனால் பாலின பாகுபாடின்றி 18 வயதுக்குட்பட்ட அனைத்து சிறார்களுக்கும் எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் தாக்குதல், துன்புறுத்தல், வன்கொடுமை, வன்புணர்வு ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டம் போக்சோ சட்டம் (POCSO) 2012. இச்சட்டமானது மே மாதம் 2012-இல் மாநிலங்களவை மற்றும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டு இதற்கான விதிமுறைகளை அரசிதழில் (Gazette of India) ஜூன் 20, 2012-இல் வெளியிடப்பட்டு நவம்பர் 14, 2012 முதல் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்