Acid attack: டிக்டாக் வீடியோ எடுக்கும் போது இளம்பெண் மீது ஆசிட் வீசிய மர்ம நபர்கள்... !
பெண் ஒருவர் டிக்டாக் வீடியோ எடுக்கும் போது அவர் மீது மர்ம நபர்கள் சிலர் ஆசிட் வீசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டிருந்தாலும் உலகத்தின் பல்வேறு நாடுகளில் இன்றும் டிக்டாக் தளம் பலரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி டிக்டாக் சமூக வலைதளத்தில் பிரபலமாகி வருகின்றனர். 32 வயது இளம் பெண் ஒருவர் டிக்டாக் வீடியோ செய்து கொண்டிருக்கும் போது அவர் மீது ஆசிட் வீசப்பட்டுள்ளது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜென்னி எல்ஹசன்(32) என்ற இளம்பெண் டிக்டாக் தளத்தில் வீடியோ வெளியிட்டு மிகவும் பிரபலமாகி வந்துள்ளார். இவர் சமீபத்தில் சிட்னியிலுள்ள ஓட்டல் ஒன்றின் வெளியே நின்று கொண்டு டிக்டாக் லைவ் செய்து வந்துள்ளார். அந்த சமயத்தில் ஒரு கருப்பு கார் அந்தப் பக்கம் வந்துள்ளது. அந்தக் காரில் இருந்து இறங்கிய அடையாளம் தெரியாத 3 நபர்கள் ஜென்னி மீது ஆசிட் போன்ற ஒன்றை வீசி விட்டு சென்றுள்ளனர்.
அந்த வீடியோவில் ஜென்னி வலி தாங்க முடியாமல் அலறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து அவர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருடைய முகம் மற்றும் கண் பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அந்தப் பெண் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்ற பிறகு மீண்டும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் அவருக்கு அந்தச் சம்பவம் நடத்த பிறகு ஏற்பட்ட அனுபவம் தொடர்பாக பகிர்ந்துள்ளார். நல்வாய்ப்பாக அவர் இந்தச் சம்பவத்தின் போது கண்களில் கூலிங் க்ளாஸ் அணிந்திருந்தார். இதன்காரணமாக அவருடைய கண் பார்வைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருந்துள்ளது. இருப்பினும் அவருடைய முகம் மற்றும் கண் பட்டையில் சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த மூன்று நபர்களும் முகக்கவசம் அணிந்துள்ளனர். ஆகவே அவர்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. எனினும் அவர்களை விரைவாக பிடிக்க காவல்துறையினர் முயற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது. பெண் ஒருவர் மீது மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் 3 பேர் சேர்ந்து ஆசிட் வீசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்