Mundra Drug Haul | `2988 கிலோ எடை.. 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு.. ஆப்கானிஸ்தானில் இருந்து குஜராத் வந்தடைந்த ஹெராயின்!
ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவின் குஜராத் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்ட சுமார் 2988 கிலோ எடையும், சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பும் கொண்ட ஹெராயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 22 அன்று, ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து இந்தியாவுக்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் இரண்டு கண்டெய்னர்கள் முழுவதும் சுமார் 2988 கிலோ எடை அளவில் ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தான் உலகின் மிகப்பெரிய போதைப் பொருள் ஏற்றுமதி நாடு என அறியப்படுகிறது. எனினும் கடந்த மாதம், ஆப்கானிஸ்தான் அரசைத் தாலிபான் அமைப்பினர் கைப்பற்றிய போது, போதைப் பொருள் விற்பனையைத் தடை செய்யவுள்ளதாக அறிவித்தனர். எனினும் அந்தத் தடை எப்படிப்பட்டது என்பதைத் தலிபான்கள் அறிவிக்கவில்லை.
குஜராத் முந்த்ரா துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் தொடர்பாக, சென்னையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக, குஜராத் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வருவாய் நுண்ணறிவுத் துறை இயக்குநரகம் கடந்த செப்டம்பர் 15 அன்று, குஜராத் முந்த்ரா துறைமுகத்திற்கு வரும் கண்டெய்னர்களில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக ரகசியத் தகவலைப் பெற்றதன் அடிப்படையில், சோதனை செய்ததில் சுமார் 2988 கிலோ ஹெராயின் போதைப் பொருளைக் கைப்பற்றியுள்ளனர்.
இந்த இரண்டு கண்டெய்னர்களும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தெற்குக் கரையோர நகரமான விஜயவாடாவின் ஆஷி டிரேடிங் கம்பெனி என்ற நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த நிறுவனத்தை நடத்தி வந்த சுதாகர், துர்கா பூர்ணா வைஷாலி ஆகிய இருவர் தம்பதியினர் எனவும், இருவரும் சென்னையில் இருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்ததோடு, சென்னையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் கைதுசெய்யப்பட்ட தம்பதியினர் குஜராத் புஜ் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, தற்போது 10 நாள்களுக்கு மத்திய வருவாய் நுண்ணறிவுத் துறை இயக்குநரகத்தின் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து பதப்படுத்தப்பட்ட டால்கம் பவுடர் என்று குறிக்கப்பட்டு, இந்தக் கண்டெய்னர்கள் ஈரான் நாட்டின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் இருந்து குஜராத் முந்த்ரா துறைமுகத்திற்கு எடுக்கப்பட்டு வந்திருப்பதாகவும், கைப்பற்றிய பொருள்களை ஆய்வுசெய்ததில் அவை ஹெராயின் என்பது உறுதியாகி உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை அதிகளவில் பிடிக்கப்பட்ட போதைப் பொருள் சோதனைகளுள் 2988 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டு, இந்தச் சோதனையும் இடம்பெறுகிறது. இங்கு கைப்பற்றப்பட்டிருக்கும் ஹெராயினுக்குச் சர்வதேச சந்தையில் கிலோவுக்குச் சுமார் 5 முதல் 7 கோடி ரூபாய் வரை கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் குஜராத்தில் போதைப் பொருள் மாஃபியாவை அழிக்க முடியாமல் இருக்கிறார்கள் என்று இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.