கழிவறை குழாயில் ஆண்சிசு உடல் - கழிவறை கோப்பையில் திணித்து கொலை செய்யப்பட்டதா என விசாரணை
"சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் உயிரற்ற நிலையில் கழிவறை தொட்டிக்குள் ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது"
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு சேரன் மகாதேவி சுற்றுவட்டாரப் பகுதிகளான வீரவநல்லூர், பத்தமடை, கங்கணான் குளம், புதுக்குடி, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களின் பிரதான பயன்பாட்டில் இந்த மருத்துவமனை இருந்து வருகிறது. சுமார் 40 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் அதிக அளவிலான பிரசவங்களும் நடைபெற்று வருகின்றது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த அரசு மருத்துவமனையில் கழிவறையில் நேற்று அடைப்பு ஏற்பட்டு உள்ளது, இதனை அடுத்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கழிவறையை சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ள தூய்மை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.
தூய்மை பணியாளர்கள் கழிவறையில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை இன்று சரி செய்வதற்காக கழிவறை குழாய் தொட்டியை உடைத்துத் திறந்து உள்ளனர். அப்போது தொப்புள் கொடியுடன் உயிரிழந்த நிலையில் ஆண் குழந்தையின் உடலை கண்ட அவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதனை அடுத்து மருத்துவமனை நிர்வாகம் மூலம் சேரன்மகாதேவி காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தொப்புள் கொடியுடன் உயிரற்ற நிலையில் இருந்த ஆண் குழந்தை உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் இறந்த நிலையில் இருப்பது பிறந்து 2 நாட்களே ஆன ஆண் சிசு என்றும், தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் குழந்தையை கழிவறை கோப்பைக்குள் போட்டு சென்று உள்ளனர். குழந்தையின் பெற்றோர் யார் உயிருடன் குழந்தையை கோப்பைக்குள் அமுக்கி கொலை செய்தனரா அல்லது இறந்த குழந்தையை போட்டு சென்றனரா என விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறிப்பாக கழிவறை குழாயில் தொட்டியை யாரும் உடைக்க முடியாத அளவிற்கு அடைக்கப்பட்டு இருந்த நிலையிலும் கழிவறை வழியாக குழந்தையை திணித்து கழிவறைத் தொட்டிக்குள் போட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது, இதனையடுத்து காவல்துறையினர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், குறிப்பாக இங்கே பிறந்த குழந்தையை யாரும் கழிவறை வழியாக உட்செலுத்தி குழந்தையை போட்டார்களா அல்லது வெளியில் இருந்து கொண்டு வரப்பட்ட குழந்தை கழிவறை வழியாக கழிவறை தொட்டியில் போடப்பட்டதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளும், விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், கழிவறை வழியாக கழிவறைத் தொட்டிக்குள் ஆண் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது, மேலும் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னரே முழு விவரமும் தெரிய வரும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.