(Source: ECI/ABP News/ABP Majha)
மனைவியை கொன்று சடலத்தை சூட்கேஸில் வைத்து ஏரியில் வீசிய கணவர் - 5 மாதங்களுக்கு பின் அம்பலம்!
மனைவியை கொலை செய்து சடலத்தை சூட்கேஸில் வைத்து கணவர் ஏரியில் வீசிய கொடூரச் சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.
மனைவியை கொலை செய்து சடலத்தை சூட்கேஸில் வைத்து கணவர் ஏரியில் வீசிய கொடூரச் சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலத்தின் கோயில் நகரம் திருப்பதி. அங்கு வசித்துவந்த வேணுகோபால் எனும் ஐடி ஊழியர் மனைவியை கொலை செய்து சடலத்தை சூட்கேஸில் வைத்து ஏரியில் வீசி எறிந்தது 5 மாதங்களுக்குப் பின்னர் அம்பலமாகியுள்ளது. திருப்பதியின் புறநகர்ப் பகுதியில் உள்ள வெங்கடாபுரம் ஏரியில் இருந்து வேணுகோபாலின் மனைவி பத்மாவின் சடலத்தை போலீஸார் மீட்டுள்ளனர். வேணுகோபால் ஹைதராபாத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொலை நடந்தது எப்படி?
வேணுகோபாலுக்கும் பத்மாவுக்கும் கடந்த 2019 ஏப்ரல் மாதம் திருமணமானது. திருமணத்துக்குப் பின்னர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றினார். அப்போதிலிருந்தே வேணுகோபால், பத்மாவுக்கு இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. ஒருகட்டத்தில் வேணுகோபால் பத்மா சண்டை முற்றிவிட இருவரும் பிரிந்துவிட்டனர். பத்மா ஆந்திராவில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கே சென்றுவிட்டார். வேணுகோபால் தரப்பில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. பத்மா மகளிர் ஆணையத்தை அணுகினார்.
இந்நிலையில் 2022 ஜனவரியில் வேணுகோபால் ஆந்திராவுக்கு சென்றார். அங்கு மனைவி வீட்டாரிடம் சமரசம் பேசினார். தான் புதிய மனிதனாக மாறிவிட்டதாகக் கூறினார். இதனை நம்பி பத்மாவின் பெற்றோரும் அவரை வேணுகோபாலுடன் அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் ஜனவரி 5 ஆம் தேதி நடந்துள்ளது. பத்மா பிரிந்து சென்ற பின்னர் வேணுகோபால் ஆந்திராவில் உள்ள ஐடி நிறுவனத்திற்கு மாறி வந்துவிட்டார் என்பது வழக்கில் கவனிக்கத்தக்கதாக உள்ளது.
ஜனவரி 5 ஆம் தேதியன்று வேணுகோபால் வீட்டில் வைத்து பத்மாவிடம் மீண்டும் சண்டை இழுத்துள்ளார். பெற்றோர் மற்றும் நண்பர் ஒருவரின் முன்னிலையில் கம்பால் பத்மாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பத்மா சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார். பின்னர், வேணுகோபால் மனைவி பத்மாவின் சடலத்தை ஒரு சூட்கேஸில் அடைத்தார். அந்த சூட்கேஸை நன்றாக கட்டி அதை ஒரு ஏரியில் தூக்கி வீசினார். இவை அனைத்திற்கும் வேணுகோபாலின் பெற்றோரும் உடந்தையாக இருந்துள்ளனர்.
பெற்றோர் பரிதவிப்பு:
இதற்கிடையில் பத்மாவின் பெற்றோர் மகளின் நிலைமையறிமால் பரிதவித்தனர். ஒவ்வொரு முறை வேணுகோபாலிடம் கேட்கும்போதும் மனைவி அங்கு சென்றுள்ளார், இங்கு சென்றுள்ளார் என்றே கூறி வந்துள்ளார். 5 மாதங்களாக மகளுடன் பேசக் கூட முடியவில்லையே என்று பத்மாவின் வயதான பெற்றோர் பரிதவித்து வந்தனர். பின்னர் குடும்பத்தினர் சிலரின் ஆலோசனைப் படி பத்மாவின் பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் போலீஸார், பத்மா காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடுக்கிவிட்டனர். போலீஸார் விசாரித்த விதத்தில் பத்மாவை தான் கொலை செய்ததாக வேணுகோபால் ஒப்புக்கொண்டார். சடலத்தை வீசி எறிந்த ஏரியையும் காட்டினார். இதனையடுத்து போலீஸார் வேணுகோபாலை கைது செய்தனர். கடந்த ஆண்டு இதேபோல் திருப்பதியில் இன்னொரு சம்பவம் நடந்தது. ஸ்ரீகாந்த் ரெட்டி என்பவர் மனைவியை கொலை செய்து சூட்கேஸில் வைத்து எரித்துவிட்டு அவர் கொரோனாவால் இறந்ததாகக் கூறி நாடகமாடினார்.
பெற்றோரின் கவனத்துக்கு..
மகள் திருமண வாழ்க்கையில் வரதட்சணை, பாலியல், மாமியார், நாத்தனார் என ஏதேனும் வழியில் தனக்கு அநீதி நடப்பதாகக் கூறினால் அவர் புகார்களுக்கு செவி கொடுங்கள். சட்ட ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்பதைப் பாருங்கள். அட்ஜஸ்ட் செய்து வாழ நிர்பந்திக்காதீர்கள். உங்கள் மகளை நீங்கள் அவளை விட பெரிய ஆண்மகனை (கணவரை) வளர்க்க, பண்படுத்த பெற்று வளர்க்கவில்லை எனத் தெரிந்து கொள்ளுங்கள். மோசமான குடும்ப வன்முறையில் சிக்கி மவுனித்து வாழ்வதை விட தனித்து நின்று சுயமாக சுதந்திரமாக வாழலாம். அதில் தவறேதும் இல்லை என்ற நம்பிக்கையை பெண் பிள்ளைகளுக்கு விதைத்து வையுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக பெண் பிள்ளைகளை படிக்க வையுங்கள். பொருளாதார சுதந்திரம் பெறச் செய்யுங்கள்.