Crime: அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை.. திமுக பிரமுகர் உட்பட 7 பேர் கைது, நடந்தது என்ன?
Crime: சேலத்தில் அதிமுக பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், திமுக கவுன்சிலரின் கணவர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாநகர் தாதகாப்பட்டி பகுதியில் இருந்து அதிமுக கொண்டலாம்பட்டி பகுதி செயலாளர் சண்முகம். இவர் தனது வீட்டிற்கு செல்லும் வழியில் சஞ்சீவராயன்பேட்டை பகுதியில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று கூறி, கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து உடலை எடுப்பதற்கு அனுமதிக்காமல் உறவினர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக அதிமுகவினர் காவல்துறையினரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் கொலை நடைபெற்ற இடத்தில் காவல்துறையினர் நூற்றுக்கு மேற்பட்டோர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 மணி நேரத்திற்கு மேலாக உடல் கொலை செய்யப்பட்ட இடத்திலே உள்ளதால், உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வது தொடர்பாக உறவினர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த பேச்சு வார்த்தையில் அதிமுக சேலம் மாநகர மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்ரமணியம், மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். மேலும் கொலை நடைபெற்ற இடத்தில் அதிமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான குவிந்துள்ளனர்.
குறிப்பாக சேலம் அதிமுக கொண்டலாம்பட்டி பகுதி செயலாளர் சண்முகம் வீட்டிற்கு செல்லும் சாலையில் லைட்டுகள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் உடைக்கப்பட்டுள்ளது. 4 மணி நேர பேச்சு வார்த்தைக்கு பின்னர் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட சண்முகம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சண்முகம் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதால் அதில் ஏதேனும் பிரச்சனையா? சமீபத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் சண்முகத்திற்கும் மற்றொரு தரப்பினருக்கும் சிறு மோதல் நடந்துள்ளது. இது கொலைகான காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினால் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
7 பேர் கைது:
சேலம் அதிமுக பகுதி செயலாளர் கொலை வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த, திமுக கவுன்சிலரின் கணவர் சதீஷ் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் 5 தனிப்படை அமைத்து மேலும் சிலரை தேடி வருகின்றனர். கஞ்சா விற்பனையில் சதிஷ் ஈடுபட்டு வந்ததாக சண்முகம் புகார் அளித்ததால் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.