சின்னசேலத்தில் தனியார் பள்ளி 3வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை - நடந்தது என்ன..?
பொது இடத்தில் சக மாணவர்கள் முன்னிலையில் மாணவியை திட்டியதாக சின்னசேலத்தில் தனியார் பள்ளி 3 வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கணியாமூர் பகுதியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்த கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஸ்ரீமதி, அதிகாலை விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சின்னசேலம் போலீசார் மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் பள்ளி மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியும், மாணவியின் மரணத்திற்கு பள்ளி நிர்வாகமே காரணம் எனக் கூறியும் பள்ளிக்கு சீல் வைக்க வேண்டும் என்றும் மாணவியின் உறவினர்கள் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த சாலை மறியல் போராட்டத்தால் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றதால் போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக எழுதி வைத்த கடிதத்தினை அவரது உறவினர்கள் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் படித்துக் காண்பித்தார். அந்த கடிதத்தில், ஆசிரியை பொது இடத்தில் சக மாணவர்கள் முன்னிலையில் மாணவியை திட்டியதாகவும், தனது பள்ளி கட்டணம் விடுதி கட்டணம் மற்றும் புத்தக கட்டணம் ஆகியவற்றை தனது தாயிடம் திருப்பி வழங்குமாறும் "I Am sorry Amma I Am Sorry Appa I Am Sorry Santhosh" என குறிப்பிட்டிருந்தது. இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் வசந்த், ஹரி பிரியா ஆகிய இருவரை சின்னசேலம் போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்ததையடுத்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த சாலை மறியல் போராட்டம் முடிவிற்கு வந்தது.
தொடர்ந்து பள்ளி மாணவியின் மர்ம மரணத்திற்கு நீதி வேண்டும் எனக் கேட்டு பள்ளி மாணவியின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சம்பவ இடத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் துணை காவல் கண்காணிப்பாளர்கள் திருமேனி, ரவிச்சந்திரன், ராஜலக்ஷ்மி ஆகியோர் தலைமையிலான 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்