கல்லூரி சென்று திரும்புவதற்குள் களவு போன 52 சவரன் தங்க நகைகள், ரொக்கம்: மயிலாடுதுறை அருகே சோகம்!
மயிலாடுதுறை அருகே வீட்டின் பின்பக்க கதவை திறந்து 52 சவரன் நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் 50 வயதான அப்துல் ஜலீல். வெளிநாட்டில் பணிபுரிந்துவரும் இவருக்கு 42 வயதான சஹிதாபானு என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணம் ஆகி விட்ட நிலையில், இளைய மகள் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பட்டம் பயின்று வருகிறார்.
இந்நிலையில் கல்லூரி விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த இளைய மகளை சஹிதாபானுவை நேற்று திருச்சியில் உள்ள கல்லூரியில் விடுவதற்காக, வீட்டில் வேலை செய்யும் தையல்நாயகியை துணைக்கு அழைத்து கொண்டு சென்றுள்ளார். அதிகாலை 3 மணிக்கு ரயிலில் அழைத்துச் சென்று திருச்சியில் உள்ள கல்லூரியில் விட்டு விட்டு மாலை வீடு திரும்பியுள்ளார்.
வீட்டை திறந்து பார்த்தபோது பின் பக்க கதவு திறந்து இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சஹிதாபானு, பின்னர் அவர் அறைக்கு சென்று பார்த்தார். அப்போது பீரோ கதவுகள் திறக்கப்பட்டு அதிலிருந்து 52 சவரன் தங்க நகைகள் மற்றும் 1 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
இதனை அடுத்து சஹிதாபானு குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சஹிதாபானுவின் புகாரின் பேரில் குத்தாலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். மேலும் தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா, துணை காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
வீட்டின் பக்கத்தில் வீடு கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. திருச்சி செல்வதற்காக நேற்று இரவு வேலையாள் தையல்நாயகி வந்து தங்கியுள்ளார். கொல்லைப்புற கிரில்கேட் பூட்டை காணவில்லை. கதவை உடைக்காமல் கொள்ளை சம்பவம் நடைபெற்றள்ளதால் காவல்துறையினர் தீவீர விசாரணை ஈடுபட்டுள்ளனர்.
காவல்துறை மும்முரம்
மேலும் கடந்த சில மாதங்களாக மயிலாடுதுறையில் நடைபெறும் கொள்ளை சம்பவங்களில் மயிலாடுதுறை மாவட்ட காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை விரைந்து பிடித்து நகைகளை மீட்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை மாவட்டம் முழுவதும் கடந்த அக்டோபர் 21 மற்றும் அக்டோபர் 22 ஆகிய இரு தினங்களில் சட்ட விரோதமாக மண் கடத்துவோர், கள்ள சாராயம் விற்பனை செய்வோர், தடைசெய்யப்பட்ட லாட்டரி டிக்கெட், கஞ்சா, குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்வோர், சூதாட்டங்களில் ஈடுபடும் நபர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர் ஆகிய குற்றவாளிகளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.