World Bank : மாற்றி மாற்றி பேசும் உலக வங்கி..இந்தியாவின் ஜிடிபி ஏறுமா? இறங்குமா?..
இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி நடப்பாண்டில் குறையும் என அண்மையில் அறிவித்த உலக வங்கி, தற்போது அதற்கு நேர் எதிராக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
உலக வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்திய அரசின் வலுவான பொருளாதார நடவடிக்கைகள் காரணமாக நடப்பு நிதியாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 6.9% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் நிலவும் பொருளாதார குழப்ப சூழ்நிலைக்கு மத்தியில், அதனை நேர்மறையாக எதிர்கொள்ளும் வகையில் இந்தியாவின் நிலை உள்ளது.
நாட்டின் பணவீக்கம் என்ன?
அதேநேரம், கடுமையான பணவியல் கொள்கை மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவை நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் காரணிகளாக உள்ளன. இதன் கரணமாக அடுத்த நிதியாண்டிற்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7%-லிருந்து 6.6% ஆக குறைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் நாட்டின் பணவீக்கம் 7.1% ஆக இருக்கும் எனவும், விலைவாசி உயர்வு கட்டுக்குள் வந்தால் பணவீக்கத்தை குறைக்கலாம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இக்கட்டான சூழலுக்கு மத்தியிலும் நிதிப்பற்றாக்குறை இலக்கான 6.4% எனும் நிலையை இந்திய அரசு அடையும் எனவும், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனாவில் நிலவும் பொருளாதார சூழலால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
India’s economy has demonstrated resilience despite a challenging external environment, says @WorldBank in its latest India Development Update. The World Bank has revised its 2022-23 GDP forecast upward from 6.5% in October to 6.9%.
— World Bank India (@WorldBankIndia) December 6, 2022
🔗 Read more: https://t.co/Hf5mZVmsgi #IDU2022 pic.twitter.com/SJb5kpJmhf
முதலீட்டிற்கு உகந்த நாடாகும் இந்தியா:
உலகளாவிய சக நாடுகளைப் போலவே, விலைவாசி உயர்வு மற்றும் உலகளவில் மத்திய வங்கிகளின் பணவியல் கொள்கையை கடினமாக்குதல் ஆகியவற்றால் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மற்ற வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளுடன் ஒப்பிடுகையில், உலகளாவிய மந்தநிலை இந்தியாவில் மிகக் குறைந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது என உலக வங்கி தெரிவித்துள்ளது. இந்தியா வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும் எனவும், வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் நிலவும் மந்தநிலை இந்தியாவை ஒரு கவர்ச்சிகரமான மாற்று முதலீட்டு இடமாக நிலைநிறுத்தக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
நான்கு முறை மாற்றப்பட்ட கணிப்பு:
2023ம் நிதியாண்டில் இந்தியாவிற்கான ஜிடிபி வளர்ச்சியினை உலக வங்கி திருத்தம் செய்வது இது நான்காவது முறையாகும். கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் 8.7%ல் இருந்து 8% ஆக குறைக்கப்பட்டது. அதன் பின்பு 7.5% ஆகவும், இறுதியாக கடந்த அக்டோபர் மாதம் 6.4% ஆகவும் மாற்றியமைக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசின் வலுவான பொருளாதார நடவடிக்கைகள் காரணமாக, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டில் இருக்கும் 6.9% ஆக இருக்கும் என, உலக வங்கி திருத்தி அறிவித்துள்ளது.
இரண்டாவது காலாண்டில் சரிவு:
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி செப்டம்பர் காலாண்டில் 6.3% ஆக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.4% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பொருளாதாரம் முதல் காலாண்டில் 13.5% வளர்ச்சியடைந்தது மற்றும் இரண்டாவது காலாண்டு வளர்ச்சியானது இந்திய ரிசர்வ் வங்கியின் கணிப்பின்படி இருந்தது. முன்னதாக நடப்பு நிதியாண்டின் ஜிடிபி வளர்ச்சி 6.5% ஆக இருக்கும் என கடந்த அக்டோபர் மாதம் கூறப்பட்ட நிலையில், தற்போது 0.4% கூடுதலாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மூலம், உலகையே வழிநடத்தும் அளவிற்கு இந்தியா மாற்றமடைந்துள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது.