வீட்டில் தங்கம் இருக்கா? அப்போ நீங்க சம்பாதிக்கலாம்... எப்படின்னு இப்ப தெரிஞ்சுக்கோங்க!
ஆபரண நகைகள் தேவையில்லை எனவும் வெறும் முதலீடாக மட்டும் தங்கத்தை வைத்திருப்பவர்களுக்கு நிச்சயம் தங்க டெபாசிட் திட்டம் மிகுந்த பயனளிக்கும் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
நம்முடைய வீட்டில் இருக்கும் தங்க நகைகளை வங்கியில் முதலீடு செய்வதன் மூலம் குறிப்பிட்ட ஆண்டுகளில் வட்டியுடன் பணத்தைத் திரும்பப் பெறும் திட்டத்தை எஸ்.பி.ஐ வங்கி நடைமுறைப்படுத்தியுள்ளது.
தங்கம் என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒன்று தான். பொதுவாக நம் கையில் சிறிதளவு பணம் இருந்தாலும் கூட தங்க நகைகளைத் தான் மக்கள் வாங்குகின்றனர். இது பாதுகாப்பானதாகவும், சிறந்த முதலீட்டு திட்டமாகவும் உள்ளது. சில சமயங்களில் அவசரத் தேவைகளுக்காக இந்த நகையை பிணையம் வைத்து வங்கிகளில் கடன் தொகைப்பெறுகின்றனர். ஆனால் சில வீடுகளில் தங்களிடம் உள்ள நகைகளை பாதுகாப்பாக இருப்பதற்காக நகைகளை லாக்கரில் வைக்கின்றனர். இதனைப் பாராமரிப்பதற்காக வங்கிகளுக்கு நாம் குறிப்பிட்டத் தொகையை செலுத்த வேண்டும். இப்படி செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வசதிக்காக எஸ்.பி.ஐ வங்கி தங்க டெபாசிட் திட்டத்தை (R-GDS) நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் நாம் வீட்டில் சும்மா இருக்கும் நகைகளை வங்கிகளில் டெபாசிட் செய்தால், வட்டியும் நாம் பணத்தை திரும்ப பெற முடியும்.
வங்கிகளில் தங்க டெபாசிட் செய்யும் வழிமுறைகள்:
எஸ்.பி.ஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ள இந்த தங்க டெபாசிட் திட்டத்தை இந்திய குடிமகன் யாராக இருந்தாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் NRI கள் இத்திட்டத்தைப் பயன்படுத்த முடியாது. மேலும் தங்க டெபாசிட் திட்டத்தில் குறைந்த பட்சம் 10 கிராம் முதல் எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்துக்கொள்ளலாம். குறிப்பாக ஷார்ட் டெர்ம் பேங்க் டெபாசிட் (STBD) 1- 3 ஆண்டுகள், . மீடியம் டெர்ம் அரசு டெபாசிட் (MTGD) - 5- 7 ஆண்டுகள், லாங் டெர்ம் அரசு டெபாசிட் (LTGD) - 12- 15 ஆண்டுகள் என உள்ளது. இதன் மூலம் டெபாசிட் 2.50 சதவீதம் வரை வட்டியை நாம் பெற்றுக்கொள்ளலாம்.
எஸ்.பி.ஐ வங்கியின் ஷார்ட் டெர்ம் டெபாசிட் திட்டத்தின் பயன்கள்:
எஸ்.பி.ஐ வங்கியின் ஷார்ம் டெர்ம் தங்க டெபாசிட் திட்டத்தில் உங்களது தங்கத்தினை டெபாசிட் செய்யும் போது, ஆண்டுக்கு 0.50 சதவீத வட்டியும், 2 ஆண்டுக்கு 055 சதவீத வட்டியும், 3 ஆண்டுக்கு 0.60 சதவீத வட்டியும் கிடைக்கப்பெறுகிறது. மேலும் திரும்பப்பெறும் போது இதனை தங்கமாகவும் அல்லது தங்கத்திற்கு சரியான மதிப்பில் தொகையையும் பெற்றுக்கொள்ளமுடியும்.
எஸ்.பி.ஐ வங்கியின் மீடியம் டெர்ம் டெபாசிட் திட்டம்:
எஸ்.பி.ஐ வங்கியின் ஷார்ம் டெர்ம் தங்க டெபாசிட் திட்டத்தில் 5-7 ஆண்டுகளுக்கு 2.25 சதவீத வட்டி கிடைக்கப்பெறுகிறது. மேலும் திரும்பப்பெறும் போது இதனை தங்கமாவும் அல்லது தங்கத்திற்கு சரியான மதிப்பில் தொகையையும் பெற்றுக்கொள்ளமுடியும். ஆனால் டெபாசிட் செய்த மூன்று ஆண்டுகளுக்குப்பிறகே திரும்பப் பெற முடியும்.
எஸ்.பி.ஐ வங்கியின் லாங் டெர்ம் டெபாசிட் திட்டம் (LTGD)
இத்திட்டத்தின் மூலம் உங்களது தங்கத்தை டெபாசிட் செய்யும் போது, 12-15 ஆண்டுகளுக்கு வட்டி விகிதம் ஆண்டுக்கு 2.50 சதவீத உள்ளது. ஆனால் இந்தத் திட்டத்தை முன் கூட்டியே டெபாசிட் செய்ய வேண்டும் என்று நினைத்தால் 5 ஆண்டுகளுக்கு பிறகே இதனைத் திரும்ப பெற முடியும். மேலும் தங்கமாக மீண்டும் திரும்ப பெறும் போது 0.20 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
எனவே வீட்டில் சும்மா இருக்கும் நகைகளை மேற்கண்ட முறைகளில் வங்கியில் டெபாசிட் செய்து அதற்குரியப் பணத்தை வட்டியுடன் திரும்ப பெறலாம். ஆனால் நாம் இதில் டெபாசிட் செய்த நகைகள் நமக்கு தங்க கட்டிகள் அல்லது தங்க நாணயங்களாக தான் கிடைக்கும் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் தங்க நகைகள் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இத்திட்டம் அந்தளவிற்கு பயனளிக்காது. ஏனென்றால் நகை வாங்கும் போது செய்கூலி, சேதாரம் போன்றவை இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் ஆபரண நகைகள் தேவையில்லை எனவும் வெறும் முதலீடாக மட்டும் தங்கத்தை வைத்திருப்பவர்களுக்கு நிச்சயம் இத்திட்டம் மிகுந்த பயனளிக்கும் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.