LPG Price hike : சமையல் எரிவாயு விலை கிடுகிடு உயர்வு...ரூ.25 அதிகரிப்பு!
பெட்ரோல் டீசல் மீதான சுங்க வரியைக் குறைக்க வாய்ப்பில்லை என மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில் தற்போது சமையல் எரிவாயு விலை அதிகரித்துள்ளது.
வீட்டில் உபயோகிக்கும் சமையல் எரிவாயு விலை ரூ.25 அதிகரித்துள்ளது. 14 கிலோ சமையல் எரிவாயுவின் விலை ரூ.852 ஆக இருந்த நிலையில் 25 ரூபாய் அதிகரித்து ரூ.877 ஆக உயர்ந்துள்ளது. பெட்ரோல் டீசல் மீதான சுங்க வரியைக் குறைக்க வாய்ப்பில்லை என மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில் தற்போது சமையல் எரிவாயு விலை அதிகரித்துள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் மானிய விலை சிலிண்டர் விலை தற்போது ரூ.877 என அதிகரித்துள்ளது.
முன்னதாக, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான சுங்க வரி குறைக்கப்படாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இது குறித்து தெரிவித்துள்ள நிர்மலா சீதாராமன், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் வெளியிடப்பட்ட எரிபொருள் பத்திரங்களுக்கு இப்போதைய அரசு 5 ஆண்டுகளில் ரூ.70,195 கோடி வட்டி செலுத்துள்ளது. 2026க்குள் மேலும் ரூ.37000 கோடி வட்டியாக செலுத்த வேண்டியுள்ளதால், எரிபொருள் விலையை குறைக்க இயலவில்லை என்றார்.
மேலும், எண்ணெய் பத்திரங்கள் காரணமாக ஏற்பட்ட கடன் சுமையால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க இயலவில்லை. மக்களின் கவலை ஏற்புடையதே. ஆனால் மத்திய மாநில அரசு விவாதித்து வழியை உருவாக்கும் வரை தீர்வு இல்லை. 1.44 லட்சம் கோடிக்கு எண்ணெய் பத்திரங்களை வெளியிட்டு காங்கிரஸ் அரசு எரிபொருள் விலையை குறைத்தது. காங்கிரஸ் அரசு வெளியிட்ட எண்ணெய் பத்திரங்களுக்கு வட்டி செலுத்துவதால் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது என்றார். கடந்த 2014ம் ஆண்டு முதல் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை கடுமையாக உயர்த்தி வருகிறது. 2014ம் ஆண்டு மே மாதத்தில் லிட்டருக்கு ரூபாய் 9.48 ஆக இருந்த பெட்ரோல் மீதான வரி, 2021 மே மாதத்தில் லிட்டருக்கு ரூபாய் 32.9 ஆக உயர்ந்துள்ளது. மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை 216 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடம் இருந்து வரிபங்கானது மற்ற மாநிலங்களைவிட குறைவாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தை பொருத்தவரை, தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று கூறியிருந்தனர். கடந்த மாதம் பேட்டியளித்திருந்த நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பெட்ரோல் விலை குறைப்பு என்பது தற்போது சாத்தியமில்லை என்பது போல கருத்து தெரிவித்திருந்தார். இதனால், தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகள் குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் உண்டானது.
மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு கடந்த 10 ஆண்டுகளுக்கான நிதிநிலை குறித்து வெளியான வெள்ளை அறிக்கை அடிப்படையில் நிதிநிலை அறிக்கையில் புதிய வரிவிதிப்புகளுக்கு வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், நிதியமைச்சர் பெட்ரோல் மீதான மாநில அரசின் வரியை ரூபாய் 3 குறைத்து புதிய அறிவிப்பை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் 4வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.47க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒருமாதமாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் டீசல் ரூ.94.39க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் கடந்த 13ஆம் தேதி வரை பெட்ரோல் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்டது. கடந்த 27 நாட்களாக பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 102.49-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.