Himalayan 750: வெயிட்டா, பெருசா..! ஹிமாலயன் 750 ஆன் தி வே - ராயல் என்ஃபீல்டின் ரக்கட் பாய் - டாப் 5 அப்டேட்ஸ்
Royal Enfield Himalayan 750: இந்திய சந்தையில் அடுத்த மாதம் களமிறங்க உள்ள ராயல் என்ஃபீல்டின் ஹிமாலயன் 750 மாடலின் முக்கிய விவரங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறிவோம்.

Royal Enfield Himalayan 750: இந்திய சந்தையில் ராயல் என்ஃபீல்டின் புதிய ஹிமாலயன் 750, ப்ராண்டின் ஃப்ளாக்ஷீப் மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் 750 மோட்டார் சைக்கிள்..!
ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் புதிய ஹிமாலயன் 750 கார் மாடலானது, வரும் நவம்பர் 3ம் தேதி தொடங்கி 8ம் தேதி வரையில் மிலனில் நடைபெற உள்ள ஆட்டோமொபைல் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சந்தைப்படுத்தலுக்கு முன்னதாக, வாகனத்தின் சில்-அவுட் தோற்றத்தை கொண்டு உற்பத்தி நிறுவனமானது டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த டீசரில் மிலனில் கண்காட்சி நடைபெற உள்ள இடத்தின் விவரங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த நிகழ்ச்சியின் போது ஹிமாலயன் 750 மாடல் தொடர்பான பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹிமாலயன் 750 - வண்ணங்கள், வேரியண்ட்கள்:
உத்தரகாண்டில் நடைபெற்ற சோதனை ஓட்டங்களின் போது, ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் 750 ஏற்கனவே புகைப்படங்களில் சிக்கியுள்ளது. அதன்படி, கோடுகளுடன் கூடிய கருப்பு, சில்வர், கோடுகளுடன் கூடிய வெள்ளை மற்றும் மாறுபட்ட க்ராபிக்ஸ் கொண்ட வெண்கலம் என நான்கு வண்ணங்களில் வாகனம் அடையாளம் காணப்பட்டது. அலாய் வீல்களுடன் கூடிய சாலைப் பயன்பாட்டிற்கான எடிஷன், மற்றும் ஸ்போக் வீல்களுடன் கூடிய ஆஃப்-ரோட் பயன்பாட்டிற்கான எடிஷன் என இந்த மோட்டார்சைக்கிள் இரண்டு வேரியண்ட்களில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹிமாலயன் 750 வடிவமைப்பு சிறப்பம்சங்கள்
சோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இந்த பைக்கின் பக்கவாட்டுப் பகுதியில் “750” என்ற குறியீடு, பக்கவாட்டு பாடிவொர்க்கில் டெக்ஸ்சர்டு க்ராஃபிக்ஸ் மற்றும் க்ராஸ்-ஸ்போக் அலாய் வீல்கள் இடம்பெற்றுள்ளதை வெளிப்படுத்துகின்றன. இந்த பைக்கில், வ்ரெடெஸ்டைன் டயர்களுடன் கூடிய 19-இன்ச் முன்பக்க மற்றும் 17-இன்ச் பின்பக்க அலாய் வீல்கள் பொருத்தப்படலாம்.
மற்ற வடிவமைப்பு சிறப்பம்சங்களில், அதன் மையத்திற்கு அருகில் ஒரு திறப்புடன் கூடிய உயரமான விண்ட்சீல்ட், அகலமான டேங்க் பகுதி, தலைகீழான முன்பக்க ஃபோர்க்குகள், ரிமோட் ப்ரீலோட் அட்ஜஸ்டருடன் கூடிய பின்பக்க மோனோஷாக் சஸ்பென்ஷன், இரட்டை முன்பக்க டிஸ்க் பிரேக்குகள் மற்றும் பைபிரே கேலிபர்களுடன் கூடிய பின்பக்க டிஸ்க் பிரேக் ஆகியவை அடங்கும். ஹிமாலயன் 750 பைக்கில், பின்புற லக்கேஜ் ரேக், நடுவில் திறக்கக்கூடிய உயரமான விண்ட்சீல்ட், படிநிலை இருக்கை அமைப்பு மற்றும் மென்மையான பக்கவாட்டுப் பெட்டிகள் போன்ற பயணத்திற்கான அம்சங்களும் இடம்பெறும்.
ஹிமாலயன் 750 முக்கிய அம்சங்கள்
சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, புதிய ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் 750 மாடலில் இணைப்பு வசதிகளுடன் கூடிய வட்ட வடிவ TFT டிஸ்ப்ளே, சரிசெய்யக்கூடிய க்ளட்ச் மற்றும் முன்பக்க பிரேக் லீவர், டிராக்ஷன் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், பலவிதமான ரைடிங் மோட்கள், ஆன்டி-லாக் ப்ரேக்கிங் சிஸ்டம் மற்றும் பல அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹிமாலயன் 750 - எதிர்பார்க்கப்படும் இன்ஜின்
ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் 750 பைக்கில், 750சிசி ஏர்-ஆயில் கூல்ட் இன்ஜின் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சுமார் 55bhp பவரையும், 60Nm டார்க்கையும் வழங்கக்கூடும். இதன் ட்ரான்ஸ்மிஷன் பணிகளை 6-ஸ்பீட் கியர்பாக்ஸ் கையாளும்.
இந்திய சந்தைக்கு எப்போது வரும்?
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 750, வரும் நவம்பர் மாத இறுதியில் நடைபெறும் மோட்டோவர்ஸ் 2026 நிகழ்வில் இந்தியாவில் அறிமுகமாகலாம். இந்த மோட்டார்சைக்கிளின் விலை சுமார் ரூ. 4.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்கும் என கருதப்படுகிறது. உள்ளூரில் இந்த வாகனமானது ஹோண்டா NX500 மற்றும் பிஎம்டபிள்யூ F 450 GS ஆகியவற்றுடன் போட்டியிடும். அதோடு ப்ராண்டின் போர்ட்ஃபோலியோவில் முதன்மையான அட்வென்சர் டூரர் மற்றும் அதிக திறன் கொண்ட மோட்டார்சைக்கிளாக ஹிமாலயன் 750 நிலைநிறுத்தப்பட உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்























