பெனால்டி கார்னரில் டீப் கிரேஸ் எக்காவின் கோல் அடிக்க, இந்திய மகளிர் ஹாக்கி அணி ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது.
தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா
மேடிசன் புரூக்ஸ் (25’) ஆஸ்திரேலிய அணிக்காக முதல் கோலை எடுத்த பிறகு, எக்கா (42’) இந்தியாவுக்காக ஒரு கோலைப் போட்டதால் கோல் சமன் ஆனது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலியா 2-0 என கைப்பற்றியது. ஆட்டத்தின் முதல் கால் பகுதியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி, சில நல்ல பாஸ்களை கொடுத்து பாசிட்டிவாக தொடங்கியது. மேலும் இந்திய அணி வீராங்கனைகள், ஆஸ்திரேலியாவின் வசம் பந்து இருந்தபோது, மீண்டும் அவர்கள் பக்கம் கொண்டு வருவதற்காக கடுமையாக போராடினர். அதோடு இரண்டு பெனால்டி கார்னர்களையும் தடுத்தனர்.
தொடர்ந்து போராடிய இந்தியா
மறுபுறம், ஆஸ்திரேலியா அணியும், பல சந்தர்ப்பங்களில் இந்தியாவின் தடுப்பாட்டதை சோதித்தனர். அதில் ஒருமுறை பெனால்டி கார்னரையும் கோலாக மாற்றினர். இருப்பினும், முதல் கால் கோல் இல்லாமல் முடிவடைந்ததால், இரு அணிகளும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்த முடியவில்லை. இரண்டாவது கால் பகுதி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சில பயங்கரமான பந்தை கட்டுப்படுத்தி தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர், இருப்பினும், விரைவாக எடுக்கப்பட்ட ஃப்ரீ ஹிட் மூலம் பாஸ் பெற்ற ப்ரூக்ஸ் (25') கோல் அடிக்க ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றது.
முதல் கோல்
எந்த இடைஞ்சலும் இன்றி தனியாக நின்று கொண்டிருந்த ப்ரூக்ஸ், இந்தியாவின் கோல் கீப்பரும், கேப்டனுமான சவிதா புனியாவை தாண்டி பந்தை கோல் போஸ்டுக்குள் போட்டார். 1-0 என முன்னிலையுடன் முதல் பாதி முடிந்தது. அதன்பிறகு எப்படியாவது ஒரு கோல் போட்டு சமன் செய்துவிடும் முயற்சியில் இந்தியா ஆடியது. அந்த மூன்றாவது கால் பகுதியில் டிஃபெண்டர் டீப் கிரேஸ் எக்கா (42’) பெனால்டி கார்னரை ஸ்கோராக மாற்றி அதனை செய்தார்.
சமனில் முடிந்த ஆட்டம்
இந்திய அணி ஆஸ்திரேலியாவின் தடுப்பாட்டத்தை தொடர்ந்து சோதித்து பார்த்தனர், இருப்பினும், மூன்றாவது கால் பகுதியில் வேறு கோல் எதுவும் போட முடியாமல், 1-1 என சமநிலையில் முடிந்தது. இறுதி கால் பகுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக தாக்க தொடங்கியது. எப்படியாவது ஒரு கோல் போட்டு ஆட்டத்தை வென்று இந்தியாவை ஒயிட் வாஷ் செய்ய நினைத்தது. ஆனால் இந்தியாவின் பாதுகாப்பு வரிசை வலுவாக இருந்ததால், அவர்களால் அதற்கு மேல் முன்னேற முடியவில்லை. இதற்கிடையில், இந்திய அணியின் தாக்குதல் வீரர்களும் சில நல்ல வாய்ப்புகளைப் பெற்று, பலமுறை கோல் அடிக்க அருகில் வந்தனர், ஆனால் எதையும் கோலாக மாற்ற முடியாமல் போட்டி 1-1 என சமநிலையில் முடிவடைந்தது.