குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் குஜராத்தின் வாய்ப்பு குறைந்துள்ளது. 

அடுத்த வருஷத்திற்கு இப்பவே ரெடியான சிஎஸ்கே:

கடைசி இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இன்றைய லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ள குஜராத் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம். எஸ். தோனி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி அதிரடியாக விளையாடினார்கள். மாத்ரே தொடங்கி கான்வே, ப்ரீவிஸ் என அனைவருமே குஜராத் அணியின் பந்துவீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டனர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 230 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ப்ரீவிஸ் 57 ரன்கள் அடித்தார்.

குஜராத்தின் மொத்த கதையும் ஓவர்:

குஜராத் அணிக்காக சிறப்பாக பந்து வீசிய பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 231 என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. கில், பட்லர், ரூதர்போர்டு என அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர்.

பொறுப்பாக விளையாடிய சாய் சுதர்சன் மட்டும் 41 ரன்கள் எடுத்தார். பிறகு வந்த வீரர்களும் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்த, 18.3 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், 70 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றுள்ளது. தொடர் முழுவதுமே சொதப்பிய சென்னை அணிக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது. 

நடப்பு தொடரில் பிளே-ஆஃப் சுற்றுக்கு குஜரத், பெங்களூரு, பஞ்சாப் மற்றும் மும்பை ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. ஆனாலும், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இரண்டு வாய்ப்புகளை வழங்கக் கூடிய, புள்ளிப்பட்டியலின் முதல் இரண்டு இடங்களை ஆக்கிரமிக்கப்போவது யார் என்பது தற்போது வரை உறுதியாகவில்லை.

குஜராத், பெங்களூரு, பஞ்சாப் ஆகிய அணிகளில் ஏதேனும் இரண்டு அணிகள் அந்த இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த மூன்று அணிகளும் அடுத்தடுத்து தோல்வியுற்று ஷாக் அளித்தன. இதனால், முதல் 2 இடங்களை பிடிக்கப்போவது யார் என்பதில் தொடர் இழுபறி நீடித்து வருகிறது. இதன் காரணமாக முதல் 2 இடங்களில் ஒரு இடத்தை பிடிக்கும் வாய்ப்பு மும்பை அணிக்கு பிரகாசமாகியுள்ளது.