இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா நேற்று உலக தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து புதிய வரலாறு படைத்தார். இதுகுறித்து உலக தடகளம் வெளியிட்ட தரவரிசை பட்டியலில், நீரஜ் சோப்ரா 1455 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆண்டர்சன் பீட்டர்ஸ் 1433 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் இருக்கிறார். அதே நேரத்தில் ஜேக்கப் வாட்லேஜ் 1416 புள்ளிகளுடன் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளார். முன்னதாக, 22 புள்ளிகள் பின்தங்கி இருந்த நீரஜ் சோப்ரா, அதிரடியாக முன்னேறி முதலிடத்தை அடைந்தார். 






சிறப்பான ஆண்டு: 


நீரஜ் சோப்ரா இந்த ஆண்டு தோஹா டயமண்ட் லீக்குடன் வெற்றியுடன் தொடங்கினார். இப்போட்டியில் நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்து முதலிடம் பிடித்தார். 


கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒலிம்பிக்கில் தங்கம் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா,  சூரிச்சில் நடைபெற்ற டயமண்ட் லீக்கில் 89.63 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். வருகின்ற ஜூன் 4ம் தேதி நெதர்லாந்தின் ஹோங்கலோவில் நடக்கும் ஃபேன்னி பிளாங்கர்ஸ்-கோயன் கேம்ஸில் பங்கேற்கும் நீரஜ் சோப்ரா, அதனை தொடர்ந்து ஜூன் 13-ம் தேதி, பின்லாந்தின் துர்கு நகரில் நடைபெறவுள்ள நூர்மி விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார். 






ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை நீரஜ் சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, உலக தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த முதல் இந்திய தடகள வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.